தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ. 325 கோடியில் நிலக்கரி கையாளும் இயந்திரங்கள்.. முதல்வர் துவக்கம்…
தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ. 325 கோடியில் அமைக்கப்பட்ட நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கீழ் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் அனல் மின்நிலையத்தில் 5 அலகுகள் மூலம் தினமும் சுமார் 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அனல் மின்நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து கொண்டு வருவதற்கு ஏதுவாக கன்வேயர் பெல்ட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரூ. 325 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் செயல்பாட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் இறையன்பு, எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, மின்வாரிய இயக்குநர்கள் சிவலிங்கராஜன், ராசேந்திரன், இராமச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு முதல்வர் தொடங்கி வைத்த இயந்திரங்களின் செயல்பாட்டை பார்வையிட்டார். இதுகுறித்து தமிழ செய்தி மற்றும் விளம்பரத் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
எரிசக்தித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்காக தூத்துக்குடி வஉசி துறைமுகம் தளம்- 1 இல் புதிதாக 325 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட இரண்டு நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் (Shore Unloader) செயல்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்காக தற்போது, தூத்துக்குடி துறைமுகம் தளம்-1 மற்றும் தளம் 2-இல் நிலக்கரியை கையாள்வதற்கு சுமார் 50,000 மெட்ரிக் டன் முதல் 55,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிரேனுடன் கூடிய சிறிய கப்பல்கள் மாதம் ஒன்றிற்கு 10 முதல் 12 வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அதிக அளவு நிலக்கரியை குறுகிய காலத்தில் கையாள்வதற்காகவும், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகளிலும் (5x 210 மெகாவாட்) முழு அளவில் மின் உற்பத்தி தங்கு தடையின்றி நடைபெறுவதற்காகவும்.
தமிழ்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் 70,000 மெட்ரிக் டன் முதல் 75,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பெரிய கப்பல்களில் இருந்து நிலக்கரியை விரைவாக இறக்குவதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினால் 325 கோடி ரூபாய் செலவில், தூத்துக்குடி துறைமுகம் தளம்-1-இல் நிறுவப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட புதிய இரண்டு நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் செயல்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த புதிய இயந்திரங்கள் மூலமாக குறுகிய காலத்தில் 6 முதல் 8 பெரிய கப்பல்கள் மூலம், கப்பல் ஒன்றிற்கு 70,000 டன் முதல் 75,000 டன் வரை அதிக கொள்ளளவு நிலக்கரியை இறக்க முடியும். நிலக்கரியை கையாளும் சரக்குக்
கட்டணம் டன் ஒன்றிற்கு ரூ. 700-இல் இருந்து ரூ. 540 ஆக குறையும். இதனால், ஆண்டுக்கு சுமார் 80 கோடி ரூபாய் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சேமிப்பாகக் கிடைக்கும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu