தெரிந்த ஊர் ஸ்ரீவைகுண்டம் -தெரியாத வரலாறு -புதிர் கோட்டை பற்றிய தொகுப்பு
புதிர் கோட்டை?
மதுரையும்,ஈழமும் கொண்டவன் எனப் பெயர் பெற்ற முதலாம் பராந்தகச் சோழனின் காலத்தில் அதாவது தோராயமாக கி.பி 927 ம் ஆண்டில் , நற்குடி வேளாளர் குலத்தில் 'கோட்டைப் பிள்ளைமார்' எனும் தனித் தன்மையுடைய, புதிர் வாய்ந்த ஒரு சாதியினர் வாழ்ந்து வந்தனர் இந்த வம்சாவழியில் இன்றும் பல குடும்பங்கள் வசிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் மேலச்செழுவநல்லூர் என்ற ஊரிலிருந்து இப்போதைய தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்திற்கு குடிபெயர்ந்த கோட்டைப் பிள்ளைமார் ஒரு தனித்தன்மை வாய்ந்தவர்கள் முற்காலப் பாண்டியர்களிடம் தலைமை அமைச்சர்களாகவும், அரண்மனை அகவினைஞர்களாகவும் பணியாற்றியவர்கள். இவர்களே பாண்டியர்களுக்கு முடி சூட்டும் பரம்பரையினராம்.
பாண்டியருக்குள் ஏற்பட்ட வாரிசுரிமைத் தகராறில் அரசர்க்கு முறையின்றிப் பிறந்த "கூத்தன்" என்பவனுக்கு இவர்கள் முடி சூட்ட மறுத்ததால் இச்சமுதாய பெண்களை கூத்தன் சிறையெடுக்கவும் முயற்சித்தான். இதனை விரும்பாத கோட்டைப் பிள்ளைமார்களில் பலர் கூத்தனுடன் போராடித் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டனர். மதுரையில் பாண்டிய வம்சத்தினான கூத்தனுக்கு முடிசூட்டு விழா ஏற்பாடான அதே வேளையில் கொற்கையில் பராக்கிரம பாண்டியன் என்ற ஒருபாண்டியன் ஆண்டு வந்துள்ளார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தள்ளது இந்நிலையில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய மேலச்செழுவநல்லூரை சேர்ந்த மக்கள் அவ்வூரை விட்டு வெளியேறி ஸ்ரீவைகுண்டத்தில் குடியேற கொற்கை பராக்கிரம பாண்டியன் இவர்களை இன்முகத்துடன் வரவேற்று ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைத் தானமாக அளித்தான்.
அவ்விடத்தில் அவர்கள் ஒரு மண்கோட்டையைக் கட்டி அதனுள் வசித்து வரலாயினர். பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தாமிரபரணி வெள்ளத்தால் திருவைகுண்டம் ஊரும், கைலாசநாதர், கள்ளப்பிரான் கோவில்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தன என்றும்,செழுவனூர் பொன்னப் பிள்ளை என்பவரின் முன் முயற்சியால் ஆற்றின் போக்கு மாற்றப்பட்டது என்றும், அவருடைய உதவிக்குக் கைமாறாக தான் திருவைகுண்டத்தில் கோட்டையொன்று உருவாக்கப்பட்டு அங்கு வசித்தவர்கள் 'கோட்டைப் பிள்ளைமார்' என அழைக்கப்படலாயினர், என்பது அக்கால ஆங்கிலேய அதிகாரிகளின் கூற்று.
அவருடைய நினைவைப் போற்றும் வகையில் ஆதிச்சநல்லூர்க்கு அருகில் பொன்னன்குறிச்சி என்ற ஊர் உருவாக்கப்பட்டதென்றும் ஒரு கதை கூறப்படுகின்றது. அக்கதையில் இடம் பெறும் பொன்னப்பிள்ளையை பற்றித் திருவைகுண்டம் கைலாசநாதர் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள கி.பி. 1441ம் ஆண்டுக்குரிய வீரபாண்டியனின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதென்றும் கோவில் ஸ்தல வரலாறு கூறுகிறது
செழுவனூர்ப் பிறவிக்கு நல்லான் பொன்னப் பிள்ளை" என்பது அவருடைய முழுமையான பெயரென்றும் முனைவர் கமலா கணேஷ், திருவைகுண்டம் கோட்டைப் பிள்ளைமார் பற்றிய தமது ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார். இப்போதும் அந்த கோட்டையில் அவ்வம்சாவழியினர் சில குடும்பத்தவர்கள் வசித்து வருகின்றனர். சிலர் பாளையங்கோட்டையில் வசித்து வருகின்றனர். கோட்டைப் பிள்ளைமார் வம்ச பெண்கள் வெளியே செல்வதே இல்லை. பெண்ணெடுப்பதும் கொடுப்பதும் உள்ளேயே. ஆகவே இவர்களை அறியாமலேயே வெளியே 'கோட்டைப்புறம் பிள்ளைமார்" என்ற ஒரு தனிப்பிரிவு உருவாகி வந்ததால் பின்னர் அது 'வலங்கோட்டை -இடங்கோட்டை' என்று இரண்டாகப் பிரிந்தது எனவும். அதில் ஒரு பிரிவினரின் தங்கள் குலப்பெண்களை கோட்டையை விட்டு வெளியில் அனுப்பாததை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இதனால் அந்த' கோட்டை பத்தினி கோட்டை என அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டதாம். ஆனால் சமீபகாலத்தில் அந்த முறையில் சிற்சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, கோட்டைப் பிள்ளைமார் இனப்பெண்கள் வெளியில் வரத் தொடங்கினர். கல்வி கற்கத் தொடங்கினர். இந்த சமுதாய பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகள் அந்தப் பெண்ணின் வழித்தோன்றலாகவே கருதப்படுவார்களாம் இவர்கள் தாய் வழிச்சமூகத்தவர்களாவர்.
கம்யூனிஸ்ட் எழுத்தாளர் பொன்னீலன் கோட்டைப் பிள்ளைமார்களைப் பற்றி குறிப்பிடும் போது கோட்டைப் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் சமுதாய பெண்களை யார் கண்ணிலும் படாமல் பாதுகாக்க கட்டிய கோட்டை தான் ஸ்ரீவைகுண்டம் பகுதி மண் கோட்டையாகும் சுமார் 450 அடி சுற்றளவும் 10 அடி உயரமும் கொண்ட அக்கோட்டையை மூன்று நூற்றாண்டுகளாக பராமரித்தவர்கள் தங்கள் குலப் பெண்கள் வெளியுலகை பார்க்காதவாறு ஆண் ஆதிக்கம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
இத்தகைய சிறப்பு மிக்க மண் கோட்டை இன்றைய தினத்தில் முன்று பகுதிகளில் கோட்டை மதில் சுவர்கள் வீழ்த்தப்பட்ட நிலையில் அங்கு அரசு பொது நிறுவனங்கள் முளைத்து காணப்படுகிறது நாள் ஒரு மேனியும் பொழுது ஒரு வண்ணமாக விண்ணை முட்டும் வீடுகளும் களைச்செடி போல உருவாகி வந்தாலும் அதன் வடகிழக்கு பகுதியில் உள்ள சில அடி து£ர மண்கோட்டையும் அதன் மீது கம்பீரமாக நற்கும் கோட்டை காவல் தெய்வச்சிலையும் ராட்சத கதவும் இன்றும் இந்த பத்தினி கோட்டையை இவ்வூருக்கு புதிதாக வரும் நபர்களுக்கு ஒரு புதிர் கோட்டையாகவும் பிரம்பிப்பாக விளங்குவதை கண்கூடாக காணலாம்.
வருங்கால சந்ததிகளுக்கு வரலாற்றை கொண்டு சேர்க்கும் உன்னத பணியில் இன்ஸ்டாசெய்தி குழுமம்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu