நெல் கொள்முதலை தீவிரப்படுத்த பி.ஆர்.பாண்டியன் அரசுக்கு கோரிக்கை
விவசாயிகளிடம் நேரடி விசாரணை நடத்தினார் பி.ஆர். பாண்டியன்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஒன்றிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டு மறு சாகுபடி செய்த விளை நிலப்பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்டு விவசாயிகளை சந்தித்து கருத்து கேட்டறிந்தார்.
திருத்துறைப்பூண்டி அருகே மாங்குடியில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் பருவம் மாறி பெய்த பெருமழையால் பல்வேறு இடங்களில் பேரழிவை சந்திக்க வேண்டி வந்தது. பல கிராமங்களில் நடவு மற்றும் நேரடி விதைப்பு செய்து அழிந்தவர்கள் நிவாரணம் கேட்டு வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் அழிந்துபோன சம்பா, தாளடி பயிர்களை மறு உற்பத்தி செய்வதற்கு இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்ததை நம்பி விவசாயிகள் மறு சாகுபடி பணியை மேற்கொண்டுள்ளனர். அவ்வாறு காலம் கடந்து மறுசாகுபடி மேற்க்கொண்ட விவசாயிகளுக்கு இளம் பயிரை பாதுகாக்க பிப்ரவரி இறுதிவரை மேட்டூர் தண்ணீர் தேவை உள்ளது.
குறிப்பாக திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கடைமடை பகுதிகளில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் காலங்கடந்து மறு விவசாய பணிகள் நடைபெற்றுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஜனவரி 28 ல் மேட்டூர் அணை மூடுவதை கைவிட்டு பிப்ரவரி 15 வரையிலும் திறப்பினை கால நீட்டிப்பு செய்து வழங்கிட தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மேலும் தேவையான பகுதிகளுக்கு தேவையான ஆறுகளில் மட்டும் தண்ணீரைப் பங்கிட்டுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகளை நீர் பாசனத்துறை மேற்கொள்ள வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா தாளடி அறுவடை பணிகள் சுமார் 10 லட்சம் ஏக்கரில் தற்போது நடைபெற்று வருகிறது. இணையவழியில் டோக்கன் பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் ஏற்பட்ட குழப்பத்தால் கொள்முதல் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனை துரிதப்படுத்தி விவசாயிகள் பயனடைய உயர்மட்ட அதிகாரிகள் குழுவை காவிரி டெல்டா விற்கு அனுப்பிவைத்திட முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.
மாங்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் நிலைய பணியாளர்களே டோக்கன் பதிவு செய்வததற்கு விவசாயிகளுக்கு உதவி செய்து உடனடி டோக்கன் வழங்கப்பட்டு,கிராம நிர்வாக அலுவலர் ஒப்புதல் பெற்று கொள்முதல் பணி இன்று முதல் துவங்கியுள்ளது.இதனை பின்பற்றி டெல்டா முழுமையிலும் கொள்முதலை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.
முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட விவசாயிகள், நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu