திருத்துறைப்பூண்டியில் மறு நடவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம்

திருத்துறைப்பூண்டியில் மறு நடவு செய்யும் பணியில் விவசாயிகள்  தீவிரம்
X

திருத்துறைப்பூண்டி பகுதியில் மறு நடவு  பணியில் பெண் விவசாய கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மறு நடவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா, தாளடி பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்தது/ இப்பகுதிகளை பார்வையிட்ட தமிழக முதல்வர் இப்பகுதிகளில் மறு நடவு செய்வதற்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 6,000 ரூபாய் இடுபொருள் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார் .

தற்பொழுது இந்நிலப்பகுதிகளில் விவசாயிகள் மறு விதைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வரம்பியம் ,வேலூர் ,விட்டுக்கட்டி ஆகிய பகுதிகளில் நடவு பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர். விவசாயிகள் அனைவரும் தற்பொழுது விதைப்புக்கான நாற்றுக்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக முந்தைய நாட்களில் 300 ரூபாய்க்கு விற்ற ஒரு கட்டு நாற்று தற்பொழுது 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் முன்பு சாகுபடி செய்ததை விட தற்பொழுது இரு மடங்கு செலவு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் யூரியா ,டிஏபி போன்ற உரங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உரங்கள் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே உடனடியாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு உரங்கள் முறையாக கிடைக்கப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!