தூர்வாரும் பணிகளை விரைந்து துவக்கிட விவசாயிகள் கோரிக்கை
காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள ஆறு, வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகளை விரைந்து தொடங்கிட வேண்டுமென தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது சம்பந்தமாக தமிழக விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் ஜி.சேதுராமன் செவ்வாய்கிழமை நன்னிலத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது, காவிரி டெல்டாப் பகுதிகளின் பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில், தற்போது கரோனாத் தொற்றுப் பாதிப்பு இருந்தாலும், விவசாயிகள் குறுவை சாகுபடிப் பணிகளைத் துவக்கி, ஆழ்துளைக் குழாய் மூலம் நீர் பாய்ச்சி விதைத் தெளித்து விவசாய பணிகளைத் தொய்வின்றி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆறு, வாய்க்கால்கள் புதர்மண்டி காடு போல காட்சியளிக்கிறது. இவற்றை முறையாக தூர்வாரவில்லையென்றால், விவசாயத்திற்கு நீர் பாசனம் செய்வதற்கு மிகுந்த சிரமமான நிலை ஏற்படும். இந்நிலையில் தற்போது மே மாதம் முடிய உள்ள நிலையில், தமிழக அரசு இதுவரை ஆறு, வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவில்லை.
எனவே புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர், முதலமைச்சரின் கவனத்திற்கு இநிலையை எடுத்துக் கூறி, காவிரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை உடனடியாக துவக்கினால் தான், மேட்டூர் அணை திறக்கப்பட்டதும் டெல்டா மாவட்டங்களுக்கு தங்குதடையின்றி தண்ணீர் செல்லும் நிலை ஏற்படும். எனவே தமிழக விவசாயம் பாதிக்காத வகையில், தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu