மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி ஆலயத்தில் வெண்ணைத்தாழி உற்சவம்
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் இன்று வெண்ணத்தாழி உற்சவம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் பங்குனி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெண்ணைத்தாழி திருவிழா இன்று நடைபெற்றது.
வைணவ ஸ்தலங்களில் சிறப்புவாய்ந்த இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் 18 நாள் பங்குனித் திருவிழாவும், அதனை தொடர்ந்து 12 நாள் விடையாற்றி விழாவும் நடைபெறும். இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் சிறப்புவாய்ந்த திருவிழாவாக 16-ம் நாள் விழா வெண்ணைத்தாழி உற்சவம் இன்று காலை துவங்கியது. ஸ்ரீஇராஜகோபால சுவாமி நவநீத சேவையில் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளினார். கையில் வெண்ணைய் குடத்தை ஏந்தி தவழும் கண்ணனாக வந்த ஸ்ரீஇராஜகோபாலனின் முன், பின் அலங்காரங்களை கண்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் சுவாமி மீது வெண்ணையை அடித்து கோபாலா, கோபாலா என பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். சுவாமி வீதியுலாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டும் அல்லாமல் வெளிமாவட்ட, வெளி மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இந்த வெண்ணைத்தாழி திருவிழாவில் பங்கேற்றனர். நகரம் முழுவதும் விழாக்கோலமாக காணப்பட்டது .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu