தமிழக அரசுக்கு விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை
பி.ஆர் பாண்டியன்
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்
கூறியதாவது;-
தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும், ஹைட்ரோகார்பன் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டங்களை கொள்கை ரீதியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டோம். அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயிகள், வணிகர்கள், சேவை அமைப்புகள் உள்ளிட்டோர் இணைந்து போராட்டம் நடத்தியதையடுத்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த 2020ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அறிவித்தது.
அதற்கு முன் 2016 முதல் காவிரி டெல்டாவில் புதிய கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்க முன்னால் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அரசு கொள்கை ரீதியாக மறுத்துவிட்டது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு காவிரி டெல்டாவில் போராட்டங்கள் ஓய்ந்தது விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டு வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே நாகை அருகே நரிமணத்தில் மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் துணை சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தற்போது திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. அந்நிறுவனம் நரிமணத்தை சுற்றி உள்ள கிராமங்களில் விளை நிலங்களை கையகப்படுத்த கட்டாயப்படுத்தி வருகிறது.இதனை எதிர்த்து கடந்த வாரம் நாகை மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து அப்பகுதி விவசாயிகள் வெளியேறி உள்ளனர்.
எனவே இத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு உண்மை நிலையை விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.விவசாயிகள் ஒப்புதல் பெறாமல் நிலம் கையகப்படுத்துவதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.
மேலும் தற்போது தமிழக அரசு ரூபாய் 50 லட்சம் ஒதுக்கீடு செய்து பெட்ரோகெமிக்கல் மண்டலம் உருவாக்குவதற்கான ஆய்வு அறிக்கை தயார் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளதாக வந்திருக்கிற தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.இது உண்மையாக இருக்குமேயானால் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் மக்கள் மத்தியில் மிகப்பெரும் சந்தேகமும்,அச்சமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் கொள்கை நிலையையும், ஒப்பந்த அறிவிப்பு குறித்து உண்மை நிலையையும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த முன்வரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம், மறுக்கும் பட்சத்தில் விவசாயிகள் பொதுமக்கள் தீவிரமான போராட்டத்தில் களம் இறங்குவோம் என எச்சரிக்கிறோம்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் 2020-21 ஆம் ஆண்டிற்கு சம்பா காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இப்கோ டோக்கியோ நிறுவனம் இழப்பீடு வழங்கி வருகிறது. நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் 193 கிராமங்களுக்கு ௦ சதவீதம் என மதிப்பிடப்பட்டு இழப்பீடு வழங்க மறுத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசோடு தொடர்ந்து அனைவருக்கும் விடுபடாமல் இழப்பீடு கொடுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.தற்போது பட்டியலில் வெளியிடப்பட்ட சதவீத அடிப்படையில் வங்கிகளில் காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை பதிவேற்றம் செய்து வருகிறது.அதனுடைய முழுவிவரத்தையும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிந்து கொள்ள முடியாத நிலை தொடர்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அனுமதிக்கப்பட்ட தொகையைக் கூட விடுவிக்காமல் குறைவாக வழங்கப்பட்டு வருவதாகவும்,பல கிராமங்களில் விவசாயிகளுக்கு பட்டியல்படி வழங்க மறுத்து ரத்து செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.
சாகுபடி பணியில் ஈடுபட்டு காப்பீடு செய்த உண்மையான விவசாயிகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவின் அடிப்படையில் இழப்பீடு வழங்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமே தவிர தன்னிச்சையாக ரத்து செய்ய காப்பீட்டு நிறுவனத்திற்கு உரிமையில்லை.
இதனை வலியுறுத்தி வரும் நவம்பர் 9ஆம் தேதி சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் பெரும் மழையின் காரணத்தினாலும், முழுவிபரம் வரும்வரை உரிய அவகாசமளிக்கும் நோக்கில் வரும் நவம்பர் 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu