நிலபத்திரத்தை அடமானம் வைத்து கோடிக்கணக்கில் மோசடி

நிலபத்திரத்தை அடமானம் வைத்து கோடிக்கணக்கில் மோசடி
X

திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடி அருகே வடுவூரில் கிராம மக்களின் நில பத்திரங்களை நூதனமுறையில் அடமானம் வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்தவர் தலைமறைவாகி விட்டார்.

2014 ஆம் ஆண்டு முதல் வடுவூர் தென்பாதி கிராமத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி என்பவர் தனக்கு ரூ. 5 லட்சம் விவசாய கடன் பெற்றுத் தருமாறு ராமகிருஷ்ணன் என்பவரை அணுகியுள்ளார். அவர் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தனது நண்பர் மேலாளராக பணியாற்றுவதாக கூறி உத்தரவாதத்திற்காக நிலப்பத்திரத்தை எடுத்து வர கூறியுள்ளார். வங்கி மேலாளர் உதவியுடன் 25 லட்ச ரூபாய் அளவிற்கு நில பத்திரத்தை அடமானம் வைத்துப் பணம் பெற்றுள்ளார்.இதுபோல் வடுவூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் பலரிடமும் கிராம மக்கள் கேட்ட தொகைக்கு அதிகமாக பத்திரங்களை அடமானம் வைத்து தஞ்சாவூரிலுள்ள தனியார் வங்கி , தனியார் நிதி நிறுவனம் போன்ற வங்கிகளில் கூடுதலாக பணம் பெற்றுள்ளார்.

ஆனால் தற்போது கடன் தொகை முழுமையாக செலுத்தவில்லை என வங்கியில் இருந்தும் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்தும் நிலங்களையும் வீட்டுமனைகளையும் ஜப்தி செய்யப் போவதாக வங்கி அதிகாரிகள் தொடர்ந்து கிராம மக்களை தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது . ராமகிருஷ்ணன் மீது ஏற்கனவே தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட எஸ்.பி.,களிடம் புகார் அளித்தும் இதுவரையிலும் ராமகிருஷ்ணனை கைது செய்யவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்தனர் .

ராமகிருஷ்ணன் கடந்த ஜனவரி மாதம் முதல் தலைமறைவாகிவிட்டார். சொந்த கிராமத்தை சேர்ந்தவர் என்ற நம்பிக்கையிலும் அக்கம் பக்கத்து வீட்டார் என்ற நம்பிக்கையிலும் நிலப்பத்திரத்தையும் வீட்டுமனை பத்திரத்தையும் அடமானம் வைத்த உரிமையாளர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். மேலும் தலைமறைவாகி உள்ள ராமகிருஷ்ணனை தேடும் பணியில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே இந்த நூதன மோசடிக்கு உறுதுணையாக இருந்த வங்கி மேலாளர்கள் பணியிட மாற்றம் பெற்று வேறு ஊர்களுக்கு சென்று விட்டதாகவும் பணியை ராஜினாமா செய்து விட்டு சென்று விட்டதாகவும் வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. சொந்த கிராம மக்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நபர் குறித்து திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags

Next Story