குறுவை சாகுபடியில் இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்பு

குறுவை சாகுபடியில் இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்பு
X

மன்னார்குடி, வட்டாரத்தில் ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு மூலம் குறுவை சாகுபடிக்கான பணிகள் துவங்கியுள்ளது. இந்நிலையில், இராமாபுரம் கிராமத்தில் இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்பு பணி திருவாரூர் மாவட்ட மத்திய திட்ட துணை வேளாண்மை இயக்குநர் இரவீந்திரன் துவங்கி வைத்தார்.

அப்போது மன்னார்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார் தெரிவித்துள்ளதாவது:

நமது வட்டாரத்தில் ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள பகுதிகளில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்து வருகின்றனர். விவசாயிகள், ஆள் பற்றாக்குறையை சமாளிப்பதற்கும், சாகுபடி செலவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்கும் நேரடி நெல் விதைப்பு சாகுபடி முறை ஏதுவாக உள்ளது. நெல் விதைப்பினை வரிசையாகவும், விரைந்து முடிக்க ஏதுவாகவும் இயந்திர மூலம் நேரடி நெல் விதைப்பு செய்ய விவசாயிகளுக்கு ஆலோசணை வழங்கப்பட்டது.

ஏற்கனவே, குறுவை சாகுபடிக்கு கோடை உழவு செய்து விவசாயிகள் தங்கள் வயல்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். நெல் விதைகளை விதைக்கும் கருவி கொண்டு ஒரு அங்குல ஆழத்தில் விதைக்கலாம். இதனால், பயிர் இடைவெளியும், பயிர் எண்ணிக்கையும் பராமரிக்கப்படுகிறது. ஆற்று நீர் பாசனத்தினை பொறுத்து நீர் பாசனம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பாசனமும் 2 அங்குல ஆழம் நீர் இருந்தால் போதுமானது. நன்கு ஈரம் உள்ள சமயத்தில் பயிர் களைவதும், பயிர் இல்லாத இடங்களில் பாடு நிரப்புதலும் விதை முளைத்த 15 நாட்களில் செய்து முடிக்க வேண்டும். முதல் களை பயிர் முளைத்த 21 நாட்களிலும், இரண்டாவது களை 45 நாட்களிலும் எடுக்க வேண்டும். வறட்சியான சமயங்களில் நீர் தேவையை குறைக்க 1 சத பொட்டாஷ் கரைசலைத் தெளிக்கலாம். முன்னதாக, மண் மாதிரி சேகரித்து மண் பரிசோதணை மேற்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட

உரங்களை சரியான அளவில் பயிருக்கு சமச்சீராக கிடைக்கும் வண்ணம் இடுவது சாலச்சிறந்தது. இவ்வாறு அப்பகுதி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி ஒன்றிய குழு துணைத்தலைவர் வனிதா அருள்ராஜன், சவளகாரன் பஞ்சாயத்து தலைவர் சாந்தி ராஜேந்திரன், பாமணி கூட்டுறவு சங்க இயக்குநர் ஜோதி, ஊராட்சி மன்ற உறுப்பினர் தனலெட்சுமி மோகன் மற்றும் அப்பகுதி முன்னோடி விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் வேம்பையன் மற்றும் அண்ணாத்துரை செய்திருந்தனர்.

Tags

Next Story
ai future project