100க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களை உருவாக்கிய சாதனை இளைஞர்
போல்த்ராஜ் உருவாக்கிய விளையாட்டு வீரர்கள் வாங்கிய பரிசுகள்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுகா, வெள்ளக்குடி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான ராஜேந்திரன் , மாலா ஆகியோரது மகன் போல்த்ராஜ். விவசாய கூலி தொழிலாளி குடும்பத்தில் பிறந்த இவர் தனது குடும்ப வறுமையின் காரணமாக 10-ம் வகுப்பு படிப்பினை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைதேடி அலைந்த நிலையில் ஒரு தனியார் ஆங்கில மருந்துகடையில் வேலை கிடைத்தது.
போல்த்ராஜ் தனது பள்ளி பருவத்தில் விளையாட்டு துறையில் சாதனைகளை படைத்து நாட்டுக்கும் தனது கிராமத்திற்கும் பெருமை தேடி தரவேண்டும் என்ற பேராவல் கொண்டவர். இருந்தும் தனது குடும்ப நிலைகாரணமாக அவரது கனவு நிறைவேறாமல் போனது. தான் கண்ட கனவு நிறைவேறாமல் போனாலும் மனம் தளராத போல்த்ராஜ் தனது கிராமத்தில் விளையாட்டுத்துறையில் ஆர்வம் உடைய 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறார்.
குறிப்பாக கபடி, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டில் ஆர்வம் உடைய மாணாக்கர்களுக்கு போல்த்ராஜ் தனக்கு மாதா மாதம் கிடைக்கும் சொற்ப வருவாயில் விளையாட்டு பயிற்ச்சிக்கான விளையாட்டு மைதானத்தை சீர்செய்தல், விளையாட்டு வீரர்களுக்கு தேவையான காலணி, பனியன், சீருடை உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வாங்கி தந்து விளையாட்டுத்துறையில் சாதனையாளராக உருவாக்க கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இவரது தன்னலமற்ற பணியால் விளையாட்டு வீரர்கள் பலர் அரசு வேலையில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் அரசு வேலைகளிலும் சேர்ந்து வருகின்றனர். விளையாட்டுதுறையில் சாதனைகளை படைக்க வேண்டுமென்ற கனவு போல்த்ராஜ்க்கு இருந்தபோதிலும் தனது வறுமை நிலை காரணமாக தனது கனவு கனவாகவே மாறியபோதிலும், தான் கண்ட கனவை ஆர்வம் உள்ள விளையாட்டு வீரர்கள் வாயிலாக நனவாக்கி வருகிறார். தான் பிறந்த கிராமத்தை ஒலிம்பிக் வரை கொண்டுசெல்ல வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு பாடுபட்டு வரும் போல்த்ராஜ் விளையாட்டு வீரர்களின் தன்னபிக்கை இளைஞராக பார்க்கப்பட்டு வருகிறார்.
போல்த்ராஜிவிற்கு தமிழக அரசு ஏதேனும் உதவி செய்தால் விளையாட்டுதுறையில் மேலும் பல விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் விளையாட்டுபோட்டிகளில் பங்கேற்க வைப்பார் என அப்பகுதி பொது மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu