மன்னார்குடி அரசு மருத்துவ மனையில் மூலிகைத்தோட்டம்
மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு தனியாக இயங்கி வருகிறது. இதற்கென ஒரு மருத்துவர் மற்றும் மருத்துவ உதவியாளர் நியமிக்கப்பட்டு சித்த வைத்தியம் பெற முற்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாகவே வழங்கப் பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சித்த மருத்துவப் பிரிவுக்கு தேவையான மூலிகைகளை உற்பத்தி செய்து கொள்ளவும், மருத்துவமனையைச் சுற்றி தூய்மையான காற்றை சுவாசிக்கவும் ஏதுவாக மாவட்டத்திலேயே முதன்முறையாக இந்த மூலிகைத் தோட்டம் மன்னார்குடி மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் இன்சுலின் செடி, இரணகள்ளி, பூனைமீசை, இடிதாங்கி, நொச்சி, துளசி உள்ளிட்ட 37 வகையான மூலிகை செடிகள், அரளி ரோஜா போன்ற பூச்செடிகள், கொய்யா மாதுளை சப்போட்டா போன்ற பழ செடிகள் வைக்கப்பட்டுள்ளன.
நோயாளிகளின் மனதை இலகுவாக்கும் விதமாக மேலும் மண்புழு உரம் தயாரித்தல் அமைப்பும், மீன் வளர்ப்புக்கு என தனி தொட்டியும் கட்டப்பட்டுள்ளது. மூலிகைத் தோட்டத்தை சுற்றிசுற்றுச்சூழலை பாது காக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமான வண்ணமய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இத்தகைய சிறப்புகள் அடங்கிய மூலிகைத் தோட்டத்தை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் என். விஜயகுமார் நேற்று திறந்து வைத்தார். நிலைய மருத்துவர் எம். கோவிந்தராஜ், பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் நாகராஜ், தலைமை செவிலியர்கள் வசந்தி அமுதா, செவிலியர்கள் தனலட்சுமி, உமாமகேஸ்வரி, தனியார் ஒப்பந்த ஊழியர்கள் மேலாளர் பிரபாகரன், மேற்பார்வையாளர் விக்னேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu