குளத்தில் கலந்த விஷம்: மீன்கள் செத்து மிதந்தது.. கால்நடைகள் அபாயம்..! -முன்விரோதம் காரணமா? போலீஸ் விசாரணை

குளத்தில் கலந்த விஷம்:  மீன்கள் செத்து மிதந்தது.. கால்நடைகள் அபாயம்..! -முன்விரோதம் காரணமா? போலீஸ் விசாரணை
X
மன்னார்குடி அருகே உள்ள ஏரி குளத்தில் விஷம் கலப்பு, 5 லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்கள் இறப்பு: சம்பவம் குறித்து போலிசார் விசாரணை.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த மூவாநல்லூர் கிராமத்தில் உள்ள 91ஏக்கர் பரப்பளவிலான ஏரி சுற்றுவட்டார கிராம மக்களின் தண்ணீர் தேவைக்கும், கால்நடைகளுக்கும், விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகின்றன. இவ் ஏரியையொட்டி 1 ஏக்கர் பரப்பளவில் மூவாநல்லூர் பஞ்சாயத்திற்கு சொந்தமான குளம் ஒன்று இருந்துவருகிறது. இக்குளத்தினை பஞ்சாயத்து நிர்வாகம் ஆண்டுதோறும் ஏலம்விட்டு அதில் இருந்து கிடைக்கும் வருவாயினை கொண்டு பஞ்சாயத்து மேம்பாட்டுக்காக பயன்படுத்தி வருவது வழக்கம்.

இந்நிலையில் இக்குளத்தினை அக்கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவர் ரூ.55,000 ஏலம் எடுத்து சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான மீன்களை வளர்த்து வருகிறார். இத்தகைய சூழலில் அப்பகுதியை சேர்ந்த ஒருபிரிவினர் தங்களது அதிகாரத்தை கொண்டு குளத்தில் உள்ள மீன்களை பிடிக்க கூடாது என குளத்தினை ஏலம் எடுத்த பிரபு மற்றும் அவரது குடும்பத்தாரை மிரட்டி தாக்கமுற்பட்டுள்ளனர். இதுசம்மந்தமாக பிரபு காவல்துறையில் புகார் தெரிவித்ததை அடுத்து மன்னார்குடி வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி குளத்தினை ஏலம் எடுத்த பிரபு மின்பிடித்துக்கொள்ள உத்தரவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த தரப்பினர் குளத்தில் கொடிய விஷமருந்தினை கலந்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய கொடிய செயலால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. இதனிடையே இக்குளத்தில் கோடைக்காலம் என்பதால் ஏராளமான ஆடு, மாடுகள் தண்ணீர் அருந்திவரும் நிலையினை கருத்தில்கொண்டு பஞ்சாயத்து நிர்வாகம் குளத்தில் விஷம் கலக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் தங்களது கால்நடைகளை குளத்தின் அருகே விடவேண்டாம் என தண்டோரா மூலம் எச்சரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!