பிரதமர் மோடி வெளியிடும் வகையில் 12 மொழிகளில் தயாராகிறது திருக்குறள்
சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு ஒன்றிய நிறுவனம், திருக்குறளை ஹிந்தி, சமஸ்கிருதம், மராத்தி, ஒடியா, நேபாளி, உருது, வாக்ரி - போளி, படகா, மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில் மொழிபெயர்த்து வருகிறது. அப்படி தயாராகும் நூல்களை, பிரதமர் வெளியிடும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்து வருவதாக செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகரன் கூறியதாவது: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், சங்க இலக்கியங்களை இந்திய மொழிகளிலும் அயலக மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளது.அதிலும் திருக்குறள், தொல்காப்பியத்தை, அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து, அனைவருக்கும் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழரின் பண்பாட்டை அறிவிப்பதில், ஆர்வம் காட்டி வருகிறது.
ஏற்கனவே, திருக்குறள் மொழிபெயர்ப்பை படித்து, பிரதமர் வியந்து பாராட்டி உள்ளார். அவர் பேசும் பல மேடைகளில், திருக்குறளை மேற்கோள் காட்டியும் வருகிறார்.சமீபத்தில், சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், திருக்குறளின் ஹிந்தி மற்றும் குஜராத்தி மொழிபெயர்ப்புகள் வழங்கப்பட்டன. அவரும் சில திருக்குறள்களை படித்து, அதன் கருத்துக்களை வியந்து பாராட்டியுள்ளார்.
அந்த வகையில், ஹிந்தி, சமஸ்கிருதம், மராத்தி, ஒடியா, நேபாளி, உருது, வாக்ரி - போளி, படகா, மலையாளம் ஆகிய உள்நாட்டு மொழிகள் மற்றும் அரபி, பாரசீகம், ஆங்கிலம் ஆகிய அயலக மொழிகளில் தயாராகும் நுால்களை, பிரதமர் வெளியிடும் வகையில் ஏற்பாடு செய்து வருகிறோம்.
அவர் வெளியிட்டால், உலக அறிஞர்களின் பார்வையில் பட்டு, பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என நம்புகிறோம். இதற்கான ஏற்பாடுகளை, மத்திய கல்வி அமைச்சகம் செய்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu