யூடியூபரின் ஹோம் டூர் வீடியோ பார்த்து திருட சென்ற திருடன்

யூடியூபரின் ஹோம் டூர் வீடியோ பார்த்து திருட சென்ற திருடன்
X

பைல் படம்.

ஹோம் டூர் செல்வதாக வீடியோ பதிவிட்டு சென்ற யூடியூபர் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன், போலீஸிடம் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த 'காக்கிச்சட்டை' படத்தில் வரும் காட்சியை போல சுவாரஸ்ய சம்பவம் கோவையில் நடந்துள்ளது. கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் 29 வயதான சுஹைல். இவருக்கு 28 வயதில் பாபினா என்ற மனைவியும் 7 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இவர் சைபர் தமிழா, சுஹைல் விலாகர் என இரண்டு யூடியூப் சேனல்களை நடத்தி வருகின்றனர். அதில் சுஹைல், வீட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள், சிறுவர்களின் குறும்புத்தனம் உள்ளிட்ட வீடியோகளை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். அதன்மூலம் சுஹைலுக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் கே.ஜி.சாவடி பிச்சனூர் பகுதியில் புதிதாக வீடு கட்டி குடும்பத்துடன் யூடியூபர் சுஹைல் குடிபுகுந்துள்ளார். மேலும் அதை ஹோம் டூர் வீடியோவாக தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். யூடியூபில் கிடைக்கும் வருமானம் மூலம் சொந்த வீடு, இரண்டு கார்கள், பைக் உள்ளிட்டவற்றை வாங்கி வசதியுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை காலை 6 மணிக்கு சுஹைலின் வீட்டுக் கதவை தட்டி உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை சுஹைலின் கழுத்தில் வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது சுதாரித்துக் கொண்ட சுஹைல், அந்த மர்ம நபரை மடக்கி பிடித்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை அதே வீட்டில் கட்டி வைத்துள்ளார். இதை தொடர்ந்து அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த கே.ஜி.சாவடி போலீசார் அந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில் பிடிபட்ட நபர் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 25 வயதான ஏசி மெக்கானிக் அனுராம் என்பது தெரியவந்தது. சுஹைல் மிக குறுகிய காலத்தில் யூடியூப் மூலம் அதிக பணம் சம்பாதித்துள்ளதாகவும், அதனை போன்று மிக எளிதாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதுச்சேரியில் இருந்து கோவைக்கு கொள்ளையடிக்க வந்ததாகவும் அனுராம் தெரிவித்துள்ளார். மேலும் நள்ளிரவு 1.30 மணியளவில் சுஹைலின் வீட்டை அடைந்த அனுராம், அவரது வீட்டின் மொட்டை மாடியிலேயே இரவு முழுவதும் தூங்கியுள்ளார். பின்னர் காலை 6 மணிக்கு எழுந்து கதவை தட்டி கத்தியை காட்டி மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அனுராமை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தனது வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவத்தையும், கொள்ளையன் வீட்டிற்குள் பிடிப்பட்டதையும் சுஹைல் வீடியோவாக்கி அதையும் தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். யூடியூபில் இதுபோன்ற எல்லா தகவல்களையும் தெரிவிப்பது சிக்கலை ஏற்படுத்தும். யூடியூபர்கள் இது போன்ற தகவல்களை தவிர்பது நல்லது என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்