திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படக்கூடாது: முதலமைச்சர் ஸ்டாலின்

திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படக்கூடாது: முதலமைச்சர் ஸ்டாலின்
X
பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல் ஆகியவற்றை பெற மக்கள் அலைய வைக்கப்படுகிறார்கள். இதனை மாவட்ட ஆட்சியாளர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தல்

"கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் நேரடியாக ஆய்வு செய்யும் "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற புதிய திட்டத்தின் கீழ், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொள்வதற்காக வேலூர் மாவட்டத்திற்கு வந்திருந்து, பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

அதனையடுத்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர், வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதல்வர் பேசுகையில், இந்தக் கூட்டத்தைப் பொறுத்தவரைக்கும் இதனுடைய நோக்கம் மக்களுக்கான பணி சிறக்க வேண்டும் என்பதை கருதித்தான் இந்தக் கூட்டத்தை கூட்டியிருக்கிறோம்.

மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் ஒரு நல்லரசாக அமைந்திட முடியும். இதை நாங்கள் மட்டுமல்ல, நீங்களும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறீர்கள். அதன்படி நாம் அனைவரும் செயல்பட்டாக வேண்டும். சுணக்கம் காணப்படக்கூடிய சில பணிகள் இந்தக் கூட்டத்தில் அடையாளம் காணப்பட்டது.

குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை வழங்கக்கூடிய பட்டா மாறுதல் உள்ளிட்ட சேவைகள், ஊரக மேம்பாடு, விளிம்பு நிலை மக்களுடைய நலன், நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்துபோன்ற முக்கிய துறைகளைச் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அதனுடைய பயன் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்தும் இந்த ஆய்வில் நாம் மேற்கொண்டிருக்கிறோம். .

திட்ட செயலாக்கத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், அதற்கான திருத்த ஆணை வெளியிடலாம். நிதி தேவை அல்லது பணியாளர் பற்றாக்குறை இருந்தால் அதைச் சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழக்கமாக, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முதன்மைச் செயலாளர்கள், துறைத் தலைவர்களைத் தான் நான் சந்திப்பேன். அதோடு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆய்வுக் கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். ஆனால் அதைவிட இப்படி அடுத்தகட்ட அலுவலர்களோடு அந்த மண்டலத்திற்கே வந்து கலந்துரையாட வேண்டும் என்று முடிவு செய்து, அந்தப் பணியை இப்போது நிறைவேற்றத் தொடங்கி இருக்கிறோம்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையைக் கவனித்து வந்தாலும் - யாரும் தனியாகச் செயல்பட முடியாது. அரசுத் துறைகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. அதனால், பலரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் அடிப்படையான வழிமுறை.

பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல், அரசு நலத்திட்டங்களின் பயனடைதல் ஆகியவை எளிமையாக நடைபெற வேண்டும். மக்கள் இதற்காக சில இடங்களில் அலைய வைக்கப்படுகிறார்கள் என்ற தகவலும் வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியாளர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும். அனைத்து துறை வளர்ச்சி என்ற இலக்கோடுதான் நாம் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். அத்தகைய சிந்தனையோடுதான் திட்டங்களை தீட்டி வருகிறோம்.

பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒவ்வொரு திட்டமும் அறிவிக்கப்படுகிறது. பல்வேறு நிதி அமைப்புகளிடம் அரசு கருவூலத்தில் இருக்கும் பணத்தின் மூலமாக மட்டுமல்ல, கடன் வாங்கியும் பல திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. மக்களின் வரிப்பணமும் அரசின் நிதியில் உள்ளது. அதனால் திட்டங்களுக்கான நிதி வீணாகிவிடாமல் விரைவாகவும் - சிக்கனமாகவும் திட்டங்களை நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

திட்டப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதிக்குள் குறைவாகச் செலவு செய்து பணியை முடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதே போல் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக திட்டப்பணிகளை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அந்தந்த நிதி ஆண்டுக்கான பணிகள் அந்த ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

அரசினுடைய முன்னுரிமை பணிகள் எவை என்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும். மாவட்ட அளவில் இருக்கும் நீங்கள் உங்களது மாவட்ட எல்லைக்குட்பட்ட பணிகளை உன்னிப்பாக, கவனமாக கண்காணித்து செயல்படுத்தினால் அனைத்து திட்டங்களும் முழுமையாக மக்களை போய் சென்றடையும்.

அடுத்த மாதத்தில் தமிழ்நாடு அரசினுடைய நிதிநிலை அறிக்கை தாக்கல் ஆக இருக்கிறது. அதன்பிறகு, அமைச்சருடைய துறை மானியக் கோரிக்கைகள் தாக்கல் ஆக இருக்கிறது. புதியபுதிய திட்டங்கள் ஏராளமாக சேர்ந்துவிடும். அதற்கு முன்னதாகவே, இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திக் காட்டுங்கள் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!