வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய காட்டு மாடு

வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய காட்டு மாடு
X
தேனி வனப்பகுதியில் வனவிலங்குகளைக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட இரண்டு வனத்துறையினரைக் காட்டு மாடு முட்டியதில் பலத்த காயமடைந்த வனத்துறையினர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேனி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கண்ணகி கோயில் மற்றும் விண்ணேற்றிப் பாறை வனப்பகுதியில் கூடலூர் வனத்துறை அலுவலக பணியாளர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து வனவிலங்குகளைக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் ஒரு குழுவாக வனகாப்பாளர் பூபதி, வனவர் மாசானம் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் சுமன் ஆகிய மூன்று பேரும் கண்ணகி கோயில் வனப்பகுதியில் உள்ள வரையாடுகளைக் கணக்கெடுப்பதற்காகச் சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு மாடு ஒன்று அவர்களை எதிர்பாராத விதமாக முட்டி தாக்கியதில் வனவர் பூபதி மற்றும் வேட்டை தடுப்பு காவலர் சுமன் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் இருவர் மீதும் காட்டு மாடு முட்டி பலத்த காயம் அடைந்ததை வனவர் மாசானம் சக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தகவல் அறிந்த வனத்துறையினர் கேரளா வனத்துறையினரின் உதவியோடு கேரள மாநில வனப்பகுதி வழியாக ஜீப் வாகனம் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற இருவரும் மேல் சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வனவிலங்குகளைக் கணக்கெடுப்பதற்காகச் சென்ற வனத்துறை பணியாளர்கள் இரண்டு பேரைக் காட்டுமாடு முட்டி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil