வைகை அணை மீன்பிடி உரிமம் தனியாருக்கு டெண்டர்! தேர்தல் புறக்கணிக்க கிராம மக்கள் திட்டம்!

வைகை அணை மீன்பிடி உரிமம் தனியாருக்கு டெண்டர்! தேர்தல் புறக்கணிக்க கிராம மக்கள் திட்டம்!
X
தனியாருக்கு விடப்பட்ட வைகை அணை மீன்பிடி உரிமத்தை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் கருப்பு கொடியுடன் வைகை ஆற்றில் இறங்கி போராட்டம்

வைகை ஆற்றை நம்பி, தேனி மாவட்டம் மட்டுமல்லாது திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள் இந்த அணையின் நீரை நம்பி உள்ளனர். ​இந்த அணைப் பயன்பாட்டுக்கு வந்த கடந்த 60 ஆண்டுகாலமாக மீன்பிடியை அரசே நடத்திவந்தது. இதன் காரணமாக அணையை சுற்றியுள்ள கிராம மக்களின் பிரதான மக்களின் தொழிலாக மீன்பிடி தொழில் மாறியது.

இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பாக கிராம மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மீன்பிடி உரிமத்தை ரத்து செய்துவிட்டு, வைகை அணையில் மீன் பிடிப்பதற்கு தனியாருக்கு டெண்டர் விடப்பட்டது. இதை எதிர்த்துத் தொடர்ந்து 18 கிராம மக்களும் கடந்த ஒரு வருடமாக பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தி வந்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கருப்பு கொடியுடன் வைகை ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் கிராம மக்கள் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் அணையின் ஆழமான பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், 5 மாவட்ட மக்கள் பயன் பெற வேண்டும் என எங்களுடைய மூதாதையர்கள் அணை கட்ட நிலம் கொடுத்தார்கள். ஆனால் இன்று எங்களுடைய நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதற்காக ஒரு போராட்டம் நடத்தலாம் என காவல்துறையிடம் சென்று அனுமதி கேட்டால் சாதிரீதியாக பேசுகிறார்கள். அதை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொய் வழக்கு போடுவேன் என மிரட்டுகிறார்கள் .

வைகை அணையில் மீன்பிடிப்பதற்கு தனியாருக்கு விடப்பட்ட டெண்டரை கைவிட்டு மீண்டும் கிராம மக்களுக்கே மீன் பிடி உரிமம் வழங்க வேண்டும். இல்லை என்றால் 18 கிராம மக்களும் வீட்டில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். மேலும் தேர்தலைப் புறக்கணிக்க உள்ளோம் எனத் தெரிவித்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு