தேனி : மாங்காய் விலை தொடர் சரிவு விவசாயிகள் கவலை
மாங்காய் விலை தொடர் சரிவு -தேனி
தேனி மாவட்டத்தில் மாங்காயின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் பிரதான விவசாயமாக மாங்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. போடிநாயக்கனூர் அருகே உள்ள புதுக்குளம், அருங்குளம், வலசை துறை, பருத்திப் பொட்டு, தம்பட்டான் கரடு, பாளாதோடை, அம்மன் கோயில் புலம், பிச்சாங்கரை, தொடா, மங்கலகோம்பை மற்றும் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்கட்டுப் பகுதி, கும்பக்கரை பகுதி, செழும்பு, முருகமலை உள்ளிட்ட பகுதிகளில் மாங்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட புயலின் காரணமாக பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்ட மாங்காய்கள் காற்றில் உதிர்ந்து சேதமடைந்தன. இந்த துயர சம்பவத்தில் இருந்து விவசாயிகள் மீள்வதற்குள், தற்போது மாங்காய் விலை சரிந்து மீண்டும் விவசாயிகளை மீளா துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பழகடைகள் அடைக்கப்பட்டிருப்பதால் மாங்காய் ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காசா காய் கிலோ ரூபாய் 16-க்கும், நாட்டுக்காய் ரூபாய் 4-க்கும், கள்ளா மாங்காய் ரூபாய் 7-க்கும் செந்தூரம் காய் ரூபாய் 5க்கும், பந்தனபள்ளி ரூபாய் 10-க்கும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த சாரல் மழையில் மாங்காய்கள் சாரல் வடிந்த நிலையில் உள்ளதால் இதன் விலை மேலும் குறைய தொடங்கியுள்ளது. விவசாயிகள் தங்களது மாம்பழங்களை சேமித்து வைப்பதற்கு குளிர்பதன கிடங்கு மற்றும் மாம்பழக்கூழ் தொழிற்சாலை இல்லாத காரணத்தினால், மாம்பழங்களை பாதுகாக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
ஆகவே தேனி மாவட்டத்தில் மாம்பழ கூழ் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைத்து, விவசாயிகளின் துயர் துடைக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென்று மா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu