தேனி : அதிக விலைக்கு விற்கப்படும் மருந்துகளால் பொதுமக்கள் கவலை.
தேனி மாவட்டத்தில் பெரும்பாலான மருந்துக் கடைகளில் நோய்த்தொற்று தடுப்பு மருந்துகள் அரசு நிர்ணயம் செய்த விலையை விட அதிக விலைக்கு விற்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் வேலைவாய்ப்பு இன்றி தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது கொரோனா இரண்டாம் அலையில் அதிகப்படியான உயிரிழப்புகளை நேரில் பார்க்கும் போது, பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு கிருமி நாசினி, முகக்கவசம், கையுறை ஆகியவற்றை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மருந்துக் கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கிருமிநாசினி 200 மி.லி அளவு ரூ.110-ம், N95 முகக் கவசம் ஒன்றின் விலை ரூ.22-ம், இரண்டு அடுக்கு முககவசம் ஒன்றுக்கு ரூ.3-ம், மூன்று அடுக்கு முகக்கவசம் ஒன்றுக்கு ரூ.4-ம், கையுறை ஒன்றுக்கு ரூ.15-ம், முக தடுப்புக் கவசம் ஒன்றுக்கு ரூ.21-ம், ஆக்சிசன் ஏற்றப்படும் முககவசம் ஒன்றுக்கு ரூ.54-ம், பாதுகாப்பு கவச உடை ஒன்றுக்கு ரூ.273-ம், ஆக்சி மீட்டர் ஒன்றுக்கு ரூ.1500-ம் விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தேனி மாவட்டத்தில் பெரும்பாலான மருந்துக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அரசு நிர்ணயித்த விலைக்கு மருந்துகள் மற்றும் உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu