ஆந்திராவின் மறக்க முடியாத ஹீரோ..!

ஆந்திராவின் மறக்க முடியாத ஹீரோ..!
X

ஆந்திராவின் ஹீரோ செருகூரி ராமோஜிராவ்.

செருகூரி ராமோஜி ராவ்... 87 வயதில் மரணமடைந்த இவரின் உடலை முதல்வர் சந்திரபாபு நாயுடு சுமந்து வந்தார்.

ராமோஜிராவ் உடலை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சுமந்து வந்ததைப் பார்த்து பலரது விழிகள் வியப்பில் விரிந்திருக்கும். திரைப்படத் தயாரிப்பாளராகவும், ராமோஜி திரைப்பட நகரின் அதிபராகவும் இன்றைய தலைமுறை அறிந்திருக்கும் ராமோஜி ராவ், ஆந்திர அரசியலையே புரட்டிப் போட்ட பத்திரிகை அதிபர்.

அவர் ஆரம்பித்த ‘ஈநாடு' நாளிதழ் இப்போது 50 வயதைத் தொடுகிறது. சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த வேகத்தில் ஜெயித்தவரான என்.டி.ராமாராவின் அரசியல் வெற்றிக்குப் பின்னால் இருந்தவர் ராமோஜி ராவ்.

ஊறுகாய் பிசினஸ் தொடங்கி தொலைக்காட்சி வரை விரிந்திருக்கும் ராமோஜி ராவின் சாம்ராஜ்ஜியத்தில் அவரை ‘சேர்மன்' என்றுதான் அழைப்பார்கள். கடலோர ஆந்திராவின் ஒரு குக்கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த ராமோஜி ராவ் இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதன் பின்னணியில் இருந்தது அவரின் உழைப்பும் புத்திசாலித்தனமும் சாமர்த்தியமும்!

விளம்பர நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்க டெல்லி போனபோது அவருக்கு சிட்பண்ட் நிறுவனத்தின் நெளிவு சுளிவுகள் தெரியவந்தது. திருமணத்துக்குப் பிறகு ஹைதராபாத்தில் குடியேறி சிட்பண்ட் நிறுவனத்தைத் தொடங்கினார். அது இன்று ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் நிர்வாகம் செய்யும் மார்க்கதரிசி சிட் பண்ட் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. கையோடு ஒரு விளம்பர நிறுவனமும் தொடங்கியவர், கூடவே ஒரு உர கம்பெனியும் ஆரம்பித்தார். அந்த உர கம்பெனியின் வளர்ச்சிக்காக ஒரு பத்திரிகையும் தொடங்கினார்.

அந்த நாள்களில் ஆந்திராவின் வர்த்தக மையமாக விஜயவாடா நகரம் இருந்தது. நாளிதழ்கள் அங்கு அச்சாகிப் பல பகுதிகளுக்கும் செல்லும். விசாகப்பட்டினம் போன்ற பெருநகரங்களுக்கே மதியம்தான் நாளிதழ் வரும். மக்கள் வேலை முடிந்து விடு திரும்பியபிறகே அன்றைய நாளிதழைப் படிப்பார்கள்.

விளம்பர நிறுவன அதிபராக அவருக்கு இது விநோதமாகத் தெரிந்தது. ‘‘விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில் பதிப்பு தொடங்கினால் என்ன'’ என்று அவர் கேட்டபோது பத்திரிகை அதிபர்கள் சிரித்தார்கள். இதில் கடுப்பான அவர், ‘ஈநாடு' நாளிதழைத் தொடங்கினார். 1974-ம் ஆண்டு அதன் முதல் பதிப்பு விசாகப்பட்டினத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

அதிகாலை விடியும்போது செய்தித்தாள் வீட்டில் இருக்க வேண்டும் என்பது ராமோஜி ராவின் இலக்கு. கிராமங்களுக்குக்கூட செய்தித்தாள்களை அனுப்பி வைத்தார்.விரைவிலேயே விஜயவாடா, ஹைதராபாத் என்று பல பதிப்புகளை ஆரம்பித்தார். நான்கே ஆண்டுகளில் ஆந்திராவில் அதிகம் விற்கும் நாளிதழ் ஆனது அது.

ஆந்திர அரசியலைத் தீர்மானிக்கும் சக்திவாய்ந்தவராக ராமோஜி ராவ் விரைவிலேயே மாறினார். காங்கிரஸ் மட்டுமே அதுவரை ஆந்திராவை ஆட்சி செய்தது. முதல்வர்களை மாறி மாறி அந்தக் கட்சி பந்தாடிக்கொண்டிருந்தபோது மாநிலம் முழுக்க கொதிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் என்.டி.ராமா ராவை அரசியல் கட்சி தொடங்குமாறு பலர் சொன்னார்கள். அவர்களில் ராமோஜி ராவும் ஒருவர். தெலுங்கு தேசம் கட்சியை ராமா ராவ் ஆரம்பித்து தன் சைதன்ய ரதம் என்ற பிரசார வேனில் மாநிலம் முழுக்க அவர் போனபோது, அதைப் பெரும் செய்தியாக வெளியிட்டது ஈநாடு.

அந்தக் கட்சிக்கு அறிவிக்கப்படாத பிரசார நாளிதழாகவே அது மாறியது. கட்சிக்கான எல்லா வேலைகளையும் செய்துகொடுத்தார் ராமோஜி ராவ். தேர்தலுக்கு நான்கு நாள்களுக்கு முன்பாக ஒரு கருத்துக்கணிப்பும் வெளியிட்டார். ஈநாடு வெளியிட்ட அந்தக் கருத்துக்கணிப்பு ‘தெலுங்கு தேசம் 175 முதல் 225 தொகுதிகளில் வெல்லும்' என்றது. 1983 ஜனவரியில் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, 202 தொகுதிகளில் தெலுங்கு தேசம் வென்றிருந்தது.

‘காங்கிரஸ் தோற்றது, என்.டி.ஆர் ஜெயித்துவிட்டார்' என்று பிரதமர் இந்திரா காந்தியிடம் கட்சிக்காரர்கள் சொன்னபோது, ‘‘‘யார் சொன்னது என்.டி.ஆர் ஜெயித்துவிட்டார் என்று, ராமோஜி ராவ் அல்லவா ஜெயித்திருக்கிறார்?'' என்று கேட்டாராம் இந்திரா.

அந்த என்.டி.ஆரை ஒரு தருணத்தில் கைகழுவினார் ராமோஜி ராவ். தன் இரண்டாவது மனைவி லட்சுமி சிவபார்வதியின் பேச்சைக் கேட்டு என்.டி.ஆர் பல முடிவுகளை எடுத்துக்கொண்டிருந்த நேரம்... 1995 ஆகஸ்டில் சந்திரபாபு நாயுடுவிடம் பேசி, மாமனாருக்கு எதிராக அரசியல் கலகம் செய்யத் தூண்டினார் ராமோஜி. குடும்பத்தினர் எல்லோரும் சந்திரபாபு நாயுடு பக்கம் இருக்க, ஹைதராபாத் வைசிராய் ஹோட்டலில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ-க்களைத் திரட்டிக் கட்சியையும் ஆட்சியையும் வசப்படுத்தினார் நாயுடு.

அப்போதுதான் ராமோஜி ராவ் ஈ டி.வி-யை ஆரம்பித்திருந்தார். கட்சியின் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் சந்திரபாபு நாயுடு பக்கம் வந்துவிட்டதாக தொடர்ந்து அதில் செய்திகள் வெளியாகின. மதில் மேல் பூனையாக இருந்த பலரையும் நாயுடு முகாமுக்கு அழைத்து வந்தது அந்தச் செய்திகள்தான். தன் ராஜகுரு என்றே ராமோஜி ராவை அழைப்பார் சந்திரபாபு நாயுடு.

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியும் அவர் மகன் ஜெகன் மோகன் ரெட்டியும் ஆட்சிக்கு வந்தபோது ராமோஜி ராவுக்குப் பல நெருக்கடிகள் ஏற்பட்டன. அவரின் சிட்பண்ட் நிறுவனத்துக்குக் குடைச்சல் கொடுத்து, போட்டியாக நாளிதழும் தொலைக்காட்சியும் தொடங்கினார் ஒய்.எஸ்.ஆர். மீடியாவிலிருந்து தன் கவனத்தை ராமோஜி திரைப்பட நகருக்குத் திருப்பினார் ராமோஜி ராவ்.

மற்ற நிறுவனங்களை வெவ்வேறு பெயர்களில் ஆரம்பித்த அவர், ‘‘இது நான் ஆரம்பிக்கும் கடைசி நிறுவனம். எனவே, என் பெயரில் இருக்கட்டும்’’ என்று சொல்லியே திரைப்பட நகரை ஆரம்பித்தார். இன்று பல மொழிப் படங்கள் அங்குதான் தயாராகின்றன. ‘ஒரு செய்தியாளர் எப்போதும் ஆட்டக்களத்தில் நடுவராக இருக்க வேண்டும், பங்கேற்பாளராக இருக்கக்கூடாது' என்பது அவர் சொன்ன புகழ்மிக்க வாசகம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!