குமுளி-தேக்கடி பகுதிகளில் 144 தடை உத்தரவு : மின்சாரம் துண்டிப்பு
பைல் படம்.
கேரளா மாநிலம் மூணாறு பகுதி மக்களை அச்சுறுத்தி 20க்கும் மேற்பட்ட மக்களை கொன்ற அரிக்கொம்பன் என்ற காட்டு யானை நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர் 6 மயக்க ஊசி செலுத்தி வனத்துறை துறையினர் பிடித்தனர். இந்த அரிக்கொம்பன் யானையை தேனி மாவட்ட எல்லையான கூடலூர் அருகேயுள்ள மங்களதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ள வனப்பகுதியில் விடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் மூணாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களை கடந்த சில ஆண்டுகளாக அச்சுறுத்தியும், 20க்கும் மேற்பட்டவர்களை மிதித்து கொன்றும், 300க்கும் மேற்பட்ட கடைகளை சேதபடுத்திய அரிக்கொம்பன் என்று அழைக்கபட்ட ஒற்றை காட்டு யானை தற்போது பல கட்ட போராட்டத்திற்கு பின்னர் பிடிக்கப்பட்டது. மூணாறு அருகேயுள்ள சின்னகானல், சூரியநெல்லி, பூப்பாறை மற்றும் சாந்தன்பாறை பகுதி மக்கள் அரிக்கொம்பன் காட்டு யானையால் அச்சத்தில் இருந்தனர்.
பகல் மற்றும் இரவு நேரங்களில் ஊருக்குள் புகுவதும், கடைகளில் உள்ள பொருட்களை சேதபடுத்தி கடையை உடைப்பதும், தேயிலை தோட்டங்களுக்கு செல்லும் பொதுமக்களை விரட்டுவதும், இரவு நேரங்களில் குடியிறுப்பு பகுதிகளில் வலம் வந்து மக்களை அச்சுறுத்துவதும் என பொதுமக்களின் நிம்மதியை குலைத்து வந்த யானையை பிடித்து வேறு பகுதியில் கொண்டு செல்ல வேண்டுமென இந்த பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து வனத்துறை கும்கி யானை உதவிகளுடன் அரிக்கொம்பன் யானையைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்த சூழலில் யானையை மயக்கு ஊசி செலுத்தி பிடிக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை கண்டித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்கள் ஈடுபட்டு வந்த சூழலில் யானையை பிடிப்பது தொடர்பாக ஒரு உயர்மட்ட குழுவை நீதிமன்றம் நியமித்தது .
இந்தக் குழுவின் பரிந்துரையின் பெயரில் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் நான்கு கும்கி யானைகள் இதற்காக வரவழைக்கப்பட்டன. 150 பேர் கொண்ட வனத்துறை ஊழியர்கள், ரேப்பிட் ரெஸ்பான்ஸ் டீம் ஆகியோர் மயக்க ஊசி அடங்கிய துப்பாக்கிகளுடன் கடந்த இரண்டு நாட்களாக அரிக்கொம்பன் யானையை வனப்பகுதிக்குள் தேடி வந்தனர்.
இந்த சூழலில் இன்று யானை சின்னக்கானல் அருகே உள்ள வனப்பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதனை பட்டாசுகள் வெடித்து சிமெண்ட் பாலம் பகுதி வழியாக கொண்டு வந்தனர். முதலில் ஒரு மயக்க ஊசி செலுத்தினார்கள் ஆனால் இந்த மயக்க ஊசிக்கு யானை எவ்வித சலனமும் இருப்பதைக் கண்டு தொடர்ந்து 4 மயக்க ஊசி செலுத்தப்பட்டது. தொடர் மயக்க ஊசி செலுத்திய பின்னர் யானை அரை மயக்கத்தில் இருந்த நிலையில் அதன் கால்கள் கட்டப்பட்டு கும்கி யானைகள் உதவியுடன் யானையை வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தில் ஏற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது தொடர் மழையின் காரணமாக யானையை வாகனத்தில் ஏற்றுவதில் பெரும் சிரமம் ஏற்பட்ட நிலையில் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீண்டும் யானைக்கு ஒரு மயக்க ஊசி செலுத்தப்பட்டு கும்கி யானைகள் உதவியுடன் யானையை வனத்துறையின் வாகனத்தில் ஏற்றப்பட்டது. மேலும் யானையின் கண்கள் கட்டப்பட்டும் அதன் கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டும் மேலும் யானையின் உடலில் எட்டு கிலோ எடை கொண்ட ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டது.
யானையை எங்கு விடுவது என பல்வேறு சர்ச்சைகளும் யானையை தங்கள் பகுதிக்குள் விடக்கூடாது என பல பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் யானையை எந்த பகுதியில் விடுவது குறித்து வனத்துறையினர் ரகசியம் காத்தனர். பிடிக்கப்பட்ட யானையை பூப்பாறை, நெடுங்கண்டம், உடும்பன்சோலை, பகுதி வழியாக குமுளி கொண்டுவரப்பட்டு தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தின் கூடலூர் அருகே உள்ள மங்களதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ள வனப் பகுதியில் யானையை விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்த நிலையில் யானையை குமுளி அருகே உள்ள வனப்பகுதியில் கொண்டு செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என எண்ணிய மாவட்ட நிர்வாகம் குமுளி மற்றும் தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவில் யானை மயங்கிய நிலையிலேயே மங்களதேவி கண்ணகி கோவில் பகுதியில் உள்ள வனப்பகுதியில் விடுவதற்கு கொண்டு செல்லப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu