மக்களவை தேர்தல்: தேனி தொகுதி ஒரு பார்வை...

மக்களவை தேர்தல்: தேனி தொகுதி ஒரு பார்வை...
X
மூன்று முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, பன்னீர்செல்வம் போட்டியிட்ட தொகுதிகளைக் கொண்ட நாடாளுமன்ற தொகுதி என்ற பெருமை பெற்ற தொகுதி

பெரியகுளம் தொகுதியாக இருந்தபோது 1952 முதல் 2008-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 14 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் சரிபாதியாக அதாவது 7 முறை அதிமுக கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 4 முறையும், திமுக, சுதந்திர கட்சி, சுயேட்சை தலா ஒரு முறையும் வெற்றியை தன் வசப்படுத்தியிருக்கிறது.

பின்னர் 2009ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட போது பெரியகுளம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு தேனி நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது.

அப்போது பெரியகுளம், கம்பம், போடி, ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிகள், மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகள் தேனி தொகுதியுடன் இணைக்கப்பட்டன.

அதன் பிறகு 2009, 2014, 2019 ஆகிய மூன்று முறை நடைபெற்றத் தேர்தலில் அதிமுக இரண்டு முறை, காங்கிரஸ் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன.

2019ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் தேனியைத் தவிர திமுக கூட்டணி 38 தொகுதிகளை கைப்பற்றியது. தேனி்யில் அதிமுக வெற்றது.

இதில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் 76,693 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

தேனி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து முன்னாள் அதிமுக முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். ஒரு முன்னாள் முதலமைச்சரான வி.என்.ஜானகி ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு தோற்றுள்ளார்.

பசுமையாக காணப்படும் தேனி தொகுதி அதிக அளவில் கிராமப்புறங்களையும், சிறு நகரங்களையும் கொண்டது. விவசாயம் இங்கு பிரதான தொழிலாக உள்ளது. முல்லைப் பெரியாறு அணை, வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை ஆகியவை இத் தொகுதியின் முக்கிய நீராதாரங்கள்.

தேனி தொகுதியில் பரவலாக பிரமலைக் கள்ளர் சமுதாயத்தினர் பெருமளவிலும், ஆதி திராவிடர், நாயக்கர், சிறுபான்மை சமுதாயத்தினர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.

மறுசீரமைப்புக்கு முன்பாக இது பெரியகுளம் மக்களவை தொகுதியாக இருந்தது. இப்போது தேனி மக்களவை தொகுதியாக உள்ளது.

முன்னர் இருந்த பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் தேனி , பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம் , போடிநாயக்கனூர் மற்றும் சேடப்பட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.

இந்நிலையில் தற்போதுள்ள தேனி மக்களவை தொகுதியில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம் , போடிநாயக்கனூர் தொகுதிகளும் மதுரை மாவட்டத்தின் சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகளும் உள்ளன.

தொடக்க காலத்தில் காங்கிரஸ் வென்ற தொகுதி இது. பின்னர் அதிமுக, திமுக இடையே தான் இங்கு போட்டி இருந்துள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, டி.டி.வி தினகரன் ஆகியோர் எம்.பி.யாக இருந்த தொகுதி இது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓபிஎஸ் ஆகிய 3 முதல்வர்கள் தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் இருந்து இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது இத்தொகுதிக்கு உள்ள ஒரு தனி அம்சமாகும். எனவே அதிமுகவுக்கு வலுவான வாக்கு வங்கி உள்ள தொகுதியாக இருந்து வந்துள்ளது.

இதுமட்டுமின்றி, தேனி தொகுதியில் திமுக சார்பில் கம்பம் நடராஜன் 1980, ஞானகுருசாமி 1996, திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆரூண் 2004, 2009 தேர்தல்களில் வென்றுள்ளனர்.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 33 பேர் போட்டியிட்டனர்.

இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ரவீந்திரநாத் ஆவார்.

வாக்காளர்கள் விவரம் (2024)

ஆண் - 7,92,195

பெண் - 8,20,091

மூன்றாம் பாலினத்தவர் - 217

மொத்த வாக்காளர்கள் - 16,12,503

இந்த தொகுதியில் முக்குலத்தோர் சுமார் 27 சதவீதமும், ஆதிதிராவிடர்கள் 20 சதவீதமும், கவுண்டர் 8 சதவீதமும், நாயுடு 8 சதவீதமும், பிள்ளைமார் 7 சதவீதமும், செட்டியார் 6 சதவீதமும், நாடார் 4 சதவீதமும், முஸ்லிம் 4 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 2 சதவீதமும், இதர சமுதாயத்தினர் சுமார் 14 சதவீதமும் உள்ளனர்.

திண்டுக்கல்லிலிருந்து கம்பம் லோயர் கேம்ப் வழியாக சபரிமலை வரை அகல ரயில்பாதை அமைக்கும் திட்டமும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டனர்.

தமிழ்நாடு, கேரளாவை இணைக்கும் சாக்கனூத்து மெட்டுச்சாலை, காமராஜபுரம், கிழவன்கோவில் மலைச்சாலை, போடியிலிருந்து அகமலை இணைப்புச்சாலை திட்டப் பணிகளும் அறிவிப்போடு கிடப்பில் கிடக்கிறது.

எம்.ஜி.ஆர். காலத்தில் அறிவித்த மூல வைகையாற்றில் அணைக்கட்டும் திட்டமும் கூட ஜெ., ஓபிஎஸ்-சை தொடர்ந்து இபிஎஸ் முதல்வராக இருந்தும் கூட எம்.ஜி.ஆர். அறிவித்த அந்த திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டவில்லை. அதுபோல் கம்பம், பாளையம் பகுதிகளில் திராட்சை ஆராய்ச்சி மையம் உருவாக்கியும் கூட அது சரிவர செயல்படுத்தவில்லை. இப்பகுதியில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு திராட்சை விவசாயிகளின் முக்கிய கோரிக்கை தொடர்ந்து வைத்து வந்த திராட்சை குளிரூட்டும் கிட்டங்கியை கொண்டுவரவில்லை.

அதுபோல் ஓ.பிஎஸ்-சின் சொந்த ஊரான பெரியகுளத்திலிருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானலுக்கு ரோடு போடும் திட்டமும் அரைகுறையாக கிடக்கிறது. இதனால் பெரியகுளம் மற்றும் கொடைக்கானல் மக்களும், வியாபாரிகளும் நூறு கி.மீட்டர் சுற்றித்தான் விவசாய பொருட்களை கொண்டு வரக்கூடிய அவலநிலையில் இருந்து வருகின்றனர். இப்பகுதி மாம்பழ விவசாயிகளுக்காக குளிரூட்டும் கிட்டங்கி உருவாக்கித் தருகிறேன் என்று கூறி இத்தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தபோது ஓ.பி.எஸ். வாக்குறுதி கொடுத்திருந்தார். அந்த வாக்குறுதியும் நிறைவேறவில்லை.

ஆண்டிப்பட்டி டி.சுப்புலாபுரத்தில் 110 கோடிக்கு நெசவாளர் பூங்கா அமைக்கப்பட்டும் கூட செயல்படாமல் கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும்பான்மையாக உள்ள நெசவாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வைகை அணை மூலம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள 58 கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு போவதற்காக 58ம் கால்வாய் திட்டம் கொண்டு வந்தும் கூட சரிவர செயல்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களும், விவசாயிகளும் மனம் நொந்துபோய் உள்ளனர்.

அதுபோல் உசிலம்பட்டி நகரில் முந்நூறு கோடிக்கு கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை திட்டமும் கிடப்பில் போட்டுவிட்டனர். உசிலம்பட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மயிலாடும் பாறையிலிருந்து மள்ளப்புரம் இணைப்புச்சாலை அமைக்கக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதை முன்னாள் முதலவர் ஜெ.கூட நிறைவேற்றி தருவதாக வாக்குறுதியும் கொடுத்திருந்தார்.

ஆனால் அப்பகுதியில் ஏழு கி.மீட்டர் தூரத்திற்கு சாம்பல் நிற சரணாலயமாக இருப்பதால் மத்திய அரசிடம் அனுமதி வாங்க இந்த அதிமுக அரசும் ஆர்வம் காட்டாமல் கிடப்பில் போட்டுவிட்டன. சோழவந்தான் நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி அரைகுறையாக இருக்கிறது. தேனி பாராளுமன்ற தொகுதியில் இன்னும் பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமலேயே பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. ஆனால் ஒவ்வொரு பாராளுமன்ற தேர்தலிலும் மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் அரசியல்வாதிகள் இந்த தீர்க்கப்படாத பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக கூறிவருகிறார்கள்.

இதுவரை மக்களவை தொகுதியில் வென்றவர்கள்

(பெரியகுளமாக இருந்தபோது)

1952-57 - கே. சக்திவேல் கவுண்டர் - காங்கிரஸ்

1957-62 - ஆர். நாராயணசாமி - காங்கிரஸ்

1962-67 - எம். மலைச்சாமி தேவர் - காங்கிரஸ்

1967-71 - ஹெச். அஜ்மல் கான் - சுதந்திரா கட்சி

1971-77 - எஸ். எம். முகம்மது செரிப் - இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்

1977-80 - எசு. இராமசாமி- அதிமுக

1980-84 - கம்பம் என். நடராசன் - திமுக

1984-89 - பி. செல்வேந்திரன் - அதிமுக

1989-91 - ஆர். முத்தையா - அதிமுக

1991-96 - இரா. இராமசாமி - அதிமுக

1996-98 - இரா. ஞானகுருசாமி - திமுக

1998-99 - ஆர். முத்தையா - அதிமுக

1999-04 - டி. டி. வி. தினகரன் - அதிமுக

2004-09 - ஜே. எம். ஆரூண்ரஷீத் - காங்கிரஸ்

தேனி தொகுதி ஆன பின் வென்றோர்:

2009 ஜே. எம். ஆரூண்ரஷீத் இந்திய தேசிய காங்கிரஸ்

2014 இரா. பார்த்தீபன் அதிமுக

2019 இரவீந்திரநாத் குமார் அதிமுக

தற்போதைய 2024 தேர்தலில் திமுக சார்பில் தங்க.தமிழ்செல்வன், அமமுக சார்பில் டிடிவி.தினகரன், அதிமுக சார்பில் நாராயணசாமி போட்டியில் உள்ளனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!