கண்ணகி கோயில் திருவிழா- உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
கண்ணகி கோயில் திருவிழா நடத்துவது குறித்து பதிலளிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக - கேரள எல்லையில் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோவில். இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாத பௌர்ணமியன்று, சித்திரை முழுநிலவு விழா, மங்கலதேவி கண்ணகி விழா, பூமாரிவிழா என முப்பெரும் விழா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு நடைபெறவிருந்த முப்பெரும் விழா தடை செய்யப்பட்டது. இதையடுத்து நோய்த் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்ததால் மங்கலதேவி கண்ணகி கோவிலில் இந்தாண்டு சித்திரை மாதம் திருவிழா கொண்டாடப்படும் என்ற எதிர்பார்ப்பில் இரு மாநில பக்தர்களும் இருந்தனர். ஆனால் கொரோனா தொற்று இரண்டாவது அலையாக உருமாறி பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கு இ - பாஸ் நடைமுறை கட்டாயப்படுத்தப்பட்டு நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டன.
இந்நிலையில் மங்கலதேவி கண்ணகி கோவிலில் இந்தாண்டு சித்திரைத் திருவிழா நடத்த வேண்டும் என கேரள உயர்நீதிமன்றத்தில் தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த நேரு என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், வருகின்ற ஏப்ரல் 27ஆம் தேதி சித்ரா பௌர்ணமியன்று மங்கலதேவி கண்ணகி கோவிலில் திருவிழா நடைபெற வேண்டும். அதற்காக தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தி ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஆனால் தற்போது வரை எந்தவொரு கூட்டமும் நடத்தாமல், நடவடிக்கையும் எடுக்காமல் இரு மாநில அதிகாரிகளும் உள்ளனர்.
இது தொடர்பாக தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்களுக்கும் மனு அளித்தும் எந்தவித பதிலும் இல்லை. மேலும் தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாள்தோறும் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படும் கண்ணகி கோவிலில் ஆகம விதிப்படி பூஜை செய்து வழிபாடு நடத்தி, குறைந்த அளவிலான பக்தர்களுக்காவது அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சபரிமலை அய்யப்பன் கோவிலும், கண்ணகி கோவிலும் பெரியார் புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து 20கி.மீ தூரத்தில் இருப்பதால் இரு கோவில்களுக்கும் இடையே வித்தியாசம் காட்டக்கூடாது என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மனு எர்ணாகுளத்தில் உள்ள கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கேரளா சார்பில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிமன்ற அமர்வு வருகின்ற ஏப்ரல் 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பதிலளிக்குமாறு உத்தரவிட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu