தேனியில் கொரானோ நோய் தொற்று தீவிரம்

தேனியில் கொரானோ நோய் தொற்று தீவிரம்
X
- அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, இன்று அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர், தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி வருகின்ற இரண்டு வாரங்கள் மிக முக்கியமானதாகும். தற்சமயம் நமது மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் கூடுதலாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது. நமது மாவட்டத்தின் அருகில் உள்ள அண்டை மாநிலங்களிலிருந்து வியாபார ரீதியாகவும், விவசாய ரீதியாகவும் பொதுமக்கள் சென்றுவரக்கூடிய சூழ்நிலையில், நமது மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் மருத்துவ பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். பொதுப்போக்குவரத்தில், பேருந்தில் பயணங்கள் மேற்கொள்வதற்கென அரசால் சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவது குறித்து துறைச்சார்ந்த அலுவலர்கள் கண்காணித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்ட 3 நபர்களுக்கு மேல் பொதுமக்கள் வசித்து வரும் பகுதிகளை, நோய்க் கட்டுப்பாட்டு பகுதியாக கருதி, சுகாதாரப் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். அதன்படி, தேனி மாவட்டத்தில் தற்சமயம் வரை 24 நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளிலிருந்து யாரும் வெளியில் செல்லாத வகையிலும், வேறு பகுதியிலிருந்து இப்பகுதிக்கு யாரும் உள்ளே நுழையாத வகையிலும் காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களைக் கொண்டு 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் அறிவிக்கும் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அடிப்படை சுகாதாரம் மற்றும் நோய்ப்பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பொது சுகாதாரத்துறையின் களப்பணியாளர்கள் ஆய்வு செய்து மேற்பார்வையிட வேண்டும். இந்தப் பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்தல் உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதோடு, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு உதவி புரிய தன்னார்வலர்களை நியமித்து, பணிகள் மேற்கொள்வதை தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்திட வேண்டும்.

கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்படும் நபர்களுக்கு சிகிச்கை மேற்கொள்ளும் பொருட்டு தற்சமயம் போடிநாயக்கனூர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் 225 படுக்கை வசதிகளும், மாணவியர் விடுதியில் 225 படுக்கை வசதிகளும் மற்றும் தேனி நகராட்சி பகுதியில் உள்ள பழைய அரசு மருத்துவமனையில் 110 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, கிராமம் மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள பெரிய மற்றும் சிறிய கோவில்களில் நடத்தப்படும் நிகழ்வுகள் மற்றும் வார சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை சரிவர கண்காணித்து, அதனை கட்டுப்படுத்திட வேண்டும். இதே போன்று வணிக நிறுவனங்கள், பலசரக்கு கடைகள் ஆகியவைகளில் உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முறையாக சமூக இடைவெளியினை கடைபிடிப்பதனையும், கை சுத்திகரிப்பான் மற்றும் கை கழுவுதல் உள்ளிட்டவைகளை சரிவர பின்பற்றப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

மேலும், அரசு மருத்துவ நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. எனவே, பொதுமக்கள் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், அரசு மருத்துவ நிலையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்வது தொடர்பாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். நோய்த் தொற்று அறிகுறி இருந்தால் தாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் தொடர்பாக பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கிராம மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ளாட்சி அமைப்பு மற்றும் காவல்துறையின் மூலம் ஆட்டோ பிரச்சாரங்கள் வாயிலாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

கடந்தாண்டில் நமது மாவட்டத்தில் சிறப்பாக மேற்கொண்ட கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, தற்சமயமும் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், பெரியகுளம் சார் ஆட்சியர் சிநேகா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) செந்தில்குமார், துணை காவல் கண்காணிப்பாளர்கள் உதவி இயக்குநர்கள் (பேரூராட்சிகள்), (ஊராட்சிகள்) நகராட்சி ஆணையாளர்கள் உள்ளிட்ட அனைத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்