கட்சிக்காரங்களே இப்படி பண்ணலாமா? தொண்டர்களிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்
பெரியகுளம் தெற்கு ஒன்றிய பகுதிகளில், தேனி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் இரண்டாவது நாளாக தனது பரப்புரையை ஊஞ்சாம்பட்டி, வடபுதுப்பட்டி, லட்சுமிபுரம், சருத்துப்பட்டி, ஜல்லி பட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி கிராமப் பகுதிகளில் தனது பரப்புரையை மேற்கொண்டார்.
இந்த பரப்புரையின்போது மகளிர் உரிமத்தொகை குறித்து தங்க தமிழ்ச்செல்வன் பேசுகையில், "கிராமங்களில் பெரும்பாலோனோருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை" என திமுக கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் கேள்வி எழுப்பியதால், "திமுக கட்சி வேட்டியை உடுத்திக்கொண்டு நீங்க இப்படி பண்ணலாமா" என தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பினார்.
மேலும், "உச்சி வெயில் மண்டையை பொளக்குது, தொண்டை வலிக்குது, பேச்சைக் கேளு" எனக்கூறிக் கடிந்து கொண்ட தங்க தமிழ்ச்செல்வன், தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் தற்பொழுது தமிழ்நாடு அரசு வழங்கும் அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்படும் எனக் கூறி, தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பரப்புரையை மேற்கொண்டார்.
இதேபோன்று, நேற்று மார்ச் 28 கீழவடகரை ஊராட்சியில் உள்ள அழகர்சாமிபுரம் கிராமத்தில் பரப்புரை மேற்கொண்டு பேசிக் கொண்டிருந்தபோது, அழகர்சாமிபுரம் அண்ணா நகரைச் சேர்ந்த ஒரு இளைஞர், தங்களது பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி செய்து தரவில்லை எனக் கூறி பரப்புரையின் போது குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார்.
அப்பொழுது தங்க தமிழ்செல்வன் பேச்சை நிறுத்திவிட்டு, ‘தம்பி நான் காலையில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறேன், தொண்டை வலிக்கிறது, கொஞ்சம் அமைதியாக இரு’ என்று கூறி தனது பரப்புரையைத் தொடர்ந்தார். இருந்த போதும், அந்த இளைஞர் மீண்டும் சாலை வசதி குறித்து கேள்வி கேட்டதால், பரப்புரையைச் சுருக்கமாக முடித்துக் கொண்டு, வாகனத்தில் இருந்து கீழ் இறங்கி அவரது காரில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதனை அடுத்து, சாலை வசதி கோரி கேள்வி கேட்ட இளைஞரை, திமுக நிர்வாகிகள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், இளைஞரை திமுக நிர்வாகிகளிடமிருந்து மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்து, அங்கிருந்த கூட்டத்தைக் கலைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக, இப்பிரச்னை குறித்து விசாரணை செய்ததில், இளைஞர் கூறிய அழகர்சாமிபுரம் அண்ணா நகர் பகுதியில், ஊராட்சி நிர்வாகம் சாலை அமைக்க முற்பட்ட பொழுது, நகராட்சிக்குச் சொந்தமான பகுதி என கூறி பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் தடுத்ததாகக் கூறப்படும் நிலையில், பிரச்சாரத்தின்போது இளைஞர் கேள்வி எழுப்பியதாக தெரிய வந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu