நண்பர்களுக்கிடையே பிரச்சனை: கல்லூரி மாணவர் தற்கொலை

நண்பர்களுக்கிடையே பிரச்சனை: கல்லூரி மாணவர் தற்கொலை
கூடலூர் அருகே லோயர் கேம்பில் உள்ள முல்லைப் பெரியாறு ஆற்றில் குதித்த கல்லூரி மாணவன் இரண்டு நாட்களுக்குப் பின்பு இன்று பிணமாக மீட்பு - லோயர்கேம்ப் காவல்துறையினர் விசாரணை.

தேனி மாவட்டம் கூடலூர் பேச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் என்வரின் மகன் பாண்டி (20) இவர் வீரபாண்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளான். கடந்த 10 ஆம் தேதி அன்று மாலையில் வீடு திரும்பிய பாண்டி சோகமாக காணப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து அவனது தந்தை முருகன் ஏன் சோகமாக உள்ளார் எனக் கேட்டுள்ளார் அப்போது பாண்டி கல்லூரியில் நண்பர்களுக்கிடையே சிறிய சண்டை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக சோகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் பத்தாம் தேதி அன்று மாலையில் வீட்டின் அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாகக் கூறிவிட்டு பாண்டி சென்றுள்ளான்.

இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்ப் முல்லைப் பெரியாற்றின் தலைப் பகுதியான வைரவன் அணைப் பகுதிக்கு சென்று அங்கிருந்து தனது நண்பர்களுக்கு அலைபேசி மூலமாக அழைத்து கல்லூரியில் நடந்த சண்டையின் காரணமாக தான் வேதனையுடன் உள்ளதாகவும், தற்கொலை செய்யப் போவதாகவும் கூறியுள்ளான். இதனை அடுத்து தகவல் அறிந்த அவரது நண்பர்கள் உடனடியாக அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு பாண்டியை காணவில்லை. பின்னர் அப்பகுதி முழுவதும் பாண்டி இருக்கிறானா என்று தேடி பார்த்துள்ளனர் .

பாண்டி கிடைக்காத காரணத்தினால் லோயர் கேம்பில் உள்ள காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து குமுளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கம்பம் தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பாண்டியை தீவிரமாக முல்லைப் பெரியாற்று பகுதியில் தேடிவந்தனர். இந்நிலையில் இன்று காலை வைரவன் ஆணை ஆற்றுப் பகுதியின் கீழ் பக்கம் உள்ள ஒரு பகுதியிலிருந்து பாண்டியன் உடல் மிதப்பதைக் கண்டனர். இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இறந்த பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து குமுளி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

20 வயது கல்லுரி மாணவன் ஆற்றில் குதித்து பலியான சம்பவம் கூடலூர் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story