தங்கதமிழ்செல்வன் டெபாசிட் இழக்க வேண்டும் - முதல்வர்

தங்கதமிழ்செல்வன் டெபாசிட் இழக்க வேண்டும் - முதல்வர்
X

தங்கதமிழ்செல்வனை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என தேனி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி தெரிவித்தார்.

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சையதுகான் (கம்பம்), முருகன் (பெரியகுளம் (தனி), லோகிராஜன் (ஆண்டிபட்டி) உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து, போடி தேவர் சிலை ரவுண்டானா அருகே திறந்த வேனில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்தார்.அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: துணை முதல்வரை எதிர்த்து போட்டியிடும் தங்கதமிழ்செல்வன் அ.தி.மு.க.,வில் இருந்து பதவி சுகங்களை அனுபவித்து விட்டு தற்போது தி.மு.க., பக்கம் சென்று நன்றி மறந்தவராக உள்ளார்.

தீய சக்தியான தி.மு.க.,வுடன் கூட்டு சேர்ந்துள்ள தங்கதமிழ்செல்வனுக்கு தக்க பாடம் புகட்டி, போடி தொகுதி மக்கள் தேர்தலில் ‛டெபாசிட்' இழக்க செய்ய வேண்டும். துணை முதல்வரின் முயற்சியால் முல்லைப் பெரியாறு அணை கட்டிய பொறியாளர் பென்னிகுவிக்கின் மணிமண்டபம் லோயர் கேம்ப்பில் கட்டப்பட்டுள்ளது. இறைவனால் தேனி மாவட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட கொடை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். சிறுபான்மையின மக்களின் நலன் காக்கும் ஒரே அரசு அ.தி.மு.க., அரசு. தமிழகத்தில் சாதி சண்டை கிடையாது. இன்று ஒரே குடும்பமாக அனைத்து மதத்தினரும், சாதியினரும் வாழ்ந்து வருகிறோம். ஆனால், தி.மு.க.,வினர் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

ஆண்டிபட்டி நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று ஜி.எஸ்.டி., வரி விலக்கு அளிப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம். அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சி அ.தி.மு.க., இது மக்களின் கட்சி. எனவே மூன்றாவது முறையாக மீண்டும் அ.தி.மு.க., அரசு அமைய இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அதிலும் தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வரை வெற்றி பெற செய்ய வேண்டும். எனப் பேசினார்.

Tags

Next Story
ai in future agriculture