கையளவு நிலம் கூட வழங்காத கருணாநிதி- ஓபிஎஸ் குற்றச்சாட்டு
2006 ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 2ஏக்கர் நிலத்தில் கையளவு நிலம் கூட கருணாநிதி வழங்கவில்லை என போடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது நாளாக இன்று போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஜவஹர் நகர், தந்தை பெரியார் தெரு, மந்தையம்மன் கோவில் தெரு மற்றும் முருகன் கோவில் ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட ஓ.பி.எஸ், முன்னதாக ஜவஹர் நகர் பகுதியில் உள்ள மண்டு கருப்பசாமி, கௌமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அரசு செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.
கடந்த 2006 - 11 வரையில் திமுக தான் தமிழகத்தில் ஆட்சி செய்தது. ஆனால் 2ஏக்கர் நிலம் யாருக்கும் வழங்கப்படவில்லை. அதனை சட்டமன்றத்தில் கருணாநிதியிடம் நான் கேட்டதற்கு கையளவு நிலம் தான் தருவேன் என கோபமாக கூறினார். ஆனால் அந்த கையளவு நிலம் கூட திமுக ஆட்சியில் வழங்கப்படவில்லை. இதனால் திமுக தேர்தல் அறிக்கை ஒரு செல்லாத நோட்டு போன்றது என்றார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் அபகரிக்கப்பட்ட நிலம் 3500 ஏக்கர் மீண்டும் அதிமுக ஆட்சியில் ஒப்படைக்கப்பட்டது.விலையில்லா வாசிங்மிஷின் உள்ளிட்ட திட்டங்களை அதிமுக அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu