தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி உறுதி- துணைமுதல்வர்
![தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி உறுதி- துணைமுதல்வர் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி உறுதி- துணைமுதல்வர்](https://www.nativenews.in/h-upload/2021/03/13/977796-img20210312140305.webp)
போடி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுவதற்காக தனது வேட்பு மனுவை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். முன்னதாக போடி எல்லையில் உள்ள சாலை காளியம்மன் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட ஜல்லிக்கட்டு காளைக்கு மாலை அணிவித்து வணங்கினார். தொடர்ந்து போடி போஜன் பார்க், கட்டபொம்மன் சிலை, அரண்மனை, காமராஜர் பஜார் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் ஊர்வலமாக சென்றார்.வழிநெடுக அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் ஓபிஎஸ் க்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தேவாரம் சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், தேனி மாவட்ட செயலாளர் சையதுகான் உள்பட ஏராளமான அதிமுகவினர் உடன் வந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் பேசுகையில், 2011 ஆம் ஆண்டு நான் முதன் முதலில் போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட போது சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளேன், மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றியுள்ளேன். இந்த முறையும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். சிப்காட் மூலமாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக தொழிற்சாலை துவங்குவதற்கு அரசாணை வெளியிடபட்டுள்ளது. விவசாய விலை பொருட்களை மதிப்புக்கூட்டி உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu