ஆண்டிபட்டியில் தபால் ஓட்டுப்பதிவில் முறைகேடு - திமுக சாலை மறியல்.
தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி, போடி, கம்பம் மற்றும் பெரியகுளம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பதிவு செய்யும் முகாம் மாவட்டத்தில் 2 இடங்களில் இன்று நடைபெற்றது.
தேனி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியிலும் ஆண்டிபட்டி அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் தபால் ஓட்டு பதிவு செய்யப்பட்டு வந்தது.
தபால் ஓட்டுப்பதிவதற்கு முன்பாக அலுவலர்களுக்கு தபால் ஓட்டு பதிவு குறித்த பயிற்சி நடைபெற்றது. மதியம் ஒரு மணிவரை நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பயிற்சிக்குப் பின்னர் தபால் ஓட்டுக்கள் பதிவு தொடங்கியது. 4 தொகுதிக்கும் சேர்த்து 1,300க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
இந்த நிலையில் ஆண்டிபட்டி தனியார் கல்லூரியில் நடைபெற்ற தபால் ஓட்டுக்கள் பதியும் போது, அதற்கான விண்ணப்ப படிவங்கள் தாமதமாக வழங்கப்பட்டதாகவும் , அவ்வாறு வழங்கிய படிவங்களில் உறுதிமொழிகள் அடங்கிய பக்கங்கள் இல்லாமல் இருந்ததாகவும் அரசியல் கட்சியினர் புகார் கூறினர்.
உறுதிமொழிகள் இல்லாத ஓட்டுகள் செல்லாதவை ஆகிவிடும் என்றும், அந்த உறுதிமொழி படிவத்தை வைத்து வேறு நபர் மூலம் விரும்பியவர்களுக்கு ஒட்டு போட முடியும் என்றும் கூறி அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
இருந்தும் விண்ணப்ப படிவங்கள் வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்ததால் ஆத்திரமடைந்த திமுகவினர் தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போடியில் பிரசாரம் மேற்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வர இருந்த நிலையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.மேலும் தபால் ஓட்டு பதிவை மீண்டும் முதலில் இருந்து நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu