அண்ணனும், தம்பியும் நேருக்கு நேர் மோதல்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் திமுக, அதிமுக சார்பில் மகாராஜன், லோகிராஜன் ஆகிய அண்ணன் - தம்பி இருவர் நேருக்கு நேர் மோதுகின்றனர். இந்த வேட்பாளர்கள் இருவருமே கடந்த 2019 இடைத்தேர்தலில் நேருக்கு நேர் போட்டியிட்டதில், அண்ணன் மகாராஜன் வெற்றி பெற்றார். இதனால் அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்பட்ட ஆண்டிபட்டி தொகுதியில் சுமார் 20வருடங்களுக்குப் பிறகு கடந்த 2019ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.
இந்நிலையில் தற்போது நடைபெறும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் மீண்டும் அண்ணன், தம்பி இருவரும் திமுக - அதிமுக சார்பில் போட்டியிடுகின்றனர். அமமுக சார்பில் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளான அம்மச்சியாபுரம், குன்னூர், அரப்படித் தேவன் பட்டி, திருமாலாபுரம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்த அதிமுக வேட்பாளர், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அமமுக வேட்பாளரான ஜெயக்குமாரின் சொந்த ஊரான அரப்படித்தேவன்பட்டியில் பரப்புரை செய்த லோகிராஜன், 'ஜெயக்குமார் எனது மாப்பிள்ளை தான். நாளைக்கே அதிமுக - அமமுக இணைந்து விடும். எனவே, உங்களது வாக்குகளை எனக்கு அளித்து வெற்றி பெறச் செய்யுங்கள். நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்றால் திமுக வெற்றி பெற்று விடும். எனவே, என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.' எனக் கூறி வாக்கு சேகரித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu