ஆண்டிப்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் திமுக-அதிமுக மோதல்
பெண்கவுன்சிலர்களின் கணவர்களை வெளியேற கூறும் பேரூராட்சி தலைவர்
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆண்டிபட்டி பேரூராட்சியில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவி இடங்களை திமுக கைப்பற்றியது . இதையடுத்து புதிதாக பதவியேற்ற கவுன்சிலர்களின் முதல் மாதாந்திர கூட்டம் இன்று பேரூராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது .
இந்த கூட்டத்திற்கு திமுகப் பேரூராட்சித் தலைவர் சந்திரகலா தலைமை தாங்கினார். இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்க வந்த 3 அதிமுக பெண் கவுன்சிலர்களின் கணவர்களிடம் திமுக பேரூராட்சித்தலைவர் சந்திரகலா, உங்களுக்கு கூட்ட அரங்கில் அனுமதி இல்லை வெளியே செல்லுங்கள் எனக் கூறினார்.
இதையடுத்து அதிமுக கவுன்சிலர்களின் கணவர்கள் மற்றும் அவருடன் வந்த அதிமுகவிர் பேரூராட்சி தலைவரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். திமுக பேரூராட்சித்தலைவர் சந்திரகலாவிற்கு ஆதரவாக திமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .
தகவல் அறிந்து ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ராஜாராம் திமுகவினருடன் கூட்ட அரங்கிற்கு வந்து அமரவே பதட்டம் மேலும் அதிகரித்தது . எந்த நேரமும் திமுகவினரும் அதிமுகவினரும் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது .
இதையடுத்து பேரூராட்சி நிர்வாக அதிகாரி கவுன்சிலர்களைத் தவிர கூட்ட அரங்கில் இருந்து பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் உள்ளிட்ட அனைவரும் வெளியேறுமாறு உத்தரவிட்டார். ஆனால் அதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறாமல் தொடர்ந்து கூட்ட அரங்கிலேயே அமர்ந்திருந்தனர் .
இதனால், கூட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து ஆண்டிபட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவே, கூட்ட அரங்கிற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கவுன்சிலர்களை தவிர அனைவரையும் கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்றினார்கள்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, மார்க்சிஸ்ட், இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சிகளின் பெண் கவுன்சிலர்கள் கணவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்து கொண்டே கூட்டத்திலிருந்து வெளியேறினார்கள். அதனால் ஒரு மணி நேர தாமதத்திற்குப் பிறகு கூட்டம் நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu