கொரானோ சிகிச்சையளிக்க 1185 படுக்கைகள் தயார்

கொரானோ  சிகிச்சையளிக்க 1185 படுக்கைகள் தயார்
X

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனை ஆகியவைகளில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் ஆய்வு குறித்து மாவட்ட கலெக்டர் கூறுகையில், தேனி மாவட்டத்தில் தற்சமயம் வரை 46 நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளிலிருந்து யாரும் வெளியில் செல்லாத வகையிலும், வேறு பகுதியிலிருந்து இப்பகுதிக்கு யாரும் உள்ளே நுழையாத வகையிலும் காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களைக் கொண்டு 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து, இந்தப் பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்தல் உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதோடு, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு உதவி புரிய தன்னார்வலர்களை நியமித்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க வசதியாக 1185 படுக்கைகள் தயாராக உள்ளது.

குறிப்பாக, கிராம மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள பெரிய மற்றும் சிறிய கோவில்களில் நடத்தப்படும் நிகழ்வுகள் மற்றும் வார சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை சரிவர கண்காணித்து, அதனை கட்டுப்படுத்திட வேண்டும். இதே போன்று வணிக நிறுவனங்கள், பலசரக்கு கடைகள் ஆகியவைகளில் உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முறையாக சமூக இடைவெளியினை கடைபிடிப்பதனையும், கை சுத்திகரிப்பான் மற்றும் கை கழுவுதல் உள்ளிட்டவைகளை சரிவர பின்பற்ற வேண்டும்.அரசால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை சரிவர கடைபிடித்து, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளர் இளங்கோ, கோவிட் மைய பொறுப்பு அலுவலர் திருநாவுக்கரசு, இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) லட்சுமணன், போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் ரவீந்திரநாத் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil