தேனியில் சாலை மறியல் - 144 பேர் கைது

தேனியில் சாலை மறியல் - 144 பேர் கைது
X

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சாலை மறியலில் 144பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு அனைத்து ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 5வது நாளாக இன்றும் தேனியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட துணைதலைவர் முத்தையா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் முன்பாக ஒருங்கிணைந்த அரசு ஊழியர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 92பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோன்று, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் தேனி நேரு சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்ட 31நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பகுதியிலும் சாலை மறியல் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் கூடிய காங்கிரசார் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகளுக்கு இடையூறாக அமர்ந்து மறியல் செய்தனர்.‌ இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மறியலில் ஈடுபட்ட 21நபர்கள் கைது செய்யப்பட்டனர்.இதனால் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சாலை மறியலில் 144பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!