மலேசியாவில் உயிரிழந்த வாலிபர்: உடலை கேட்டு உறவினர்கள் போராட்டம்
தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பசாமி என்பவரின் மகன் முத்துக்குமார் (23). இவர் மலேசியாவில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.இந்நிலையில் இவர் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி உயிரிழந்ததாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தங்களது மகனின் உடலை மீட்டுத் தரக்கோரி மனு அளித்தனர்.
நான்கு நாட்கள் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று கூறி இன்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து அழுது ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் இவர்களது போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் தேனி மதுரை நெடுஞ்சாலையில் பெண்கள் படுத்தும் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேனி மதுரை நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு இந்து எழுச்சி முன்னணி ஆதரவு அளித்துள்ளது. தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் பகுதியில் அமர்ந்தனர்.
தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்காத வரை அப்பகுதியை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் எனக் கூறி அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது. போராட்டக்காரர்களிடம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பின்னர் காவல்துறையினர் மூலமாக போராட்டக்காரர்களை மாவட்ட ஆட்சியரை சந்திக்க வைத்து மனு அளிக்கப்பட்டது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu