பன்றி தழுவும் போட்டி நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வன வேங்கைகள் கட்சியின் சார்பில் தேனியில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி பன்றி தழுவும் போட்டி நடைபெற்றது. தேனி குறமகள், வள்ளிநகர் பகுதியில் நடைபெற்ற இப்போட்டியில், ஜல்லிக்கட்டு போன்று தொழுவாசல் (வாடிவாசல்) அமைத்து பன்றிகள் அவிழ்த்து விடப்பட்டது. தொழுவாசலின் எல்லைக் கோட்டை தான்டியதும், சுமார் 80முதல் 100கிலோ எடையுடைய பன்றிகளின் பின்னங்கால்களை பிடித்து தழுவிச் சென்றனர்.
இதில் பன்றிகளை ஓட விடாமல் நீண்ட நேரம் தழுவியிருப்பவர், வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பிடிபடாமல் ஓடிய பன்றிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போன்று விநோதமாக நடைபெற்ற இப்போட்டி பொதுமக்களிடம் ஆச்சரியத்தையும், பெரும் வியப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் அனுமதியின்றி போட்டி நடத்தியதாக அல்லிநகரம் காவல்நிலையத்தில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்லிநகரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கௌதம் புகாரில் வனவேங்கை கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உலகநாதன், தேவதானப்பட்டி பரமசிவம், சக்தீஸ்வரன் மற்றும் அல்லிநகரம் செல்வி மற்றும் பலர் மீது மிருகவதை தடுப்பு சட்டம் உள்பட 5பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் எனத்தெரிந்திருந்திருந்தும் பன்றிகளை வைத்து போட்டி நடத்தி அதன் வால் மற்றும் பின்னங்கால்களை பிடித்து துன்புறுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்றி தழுவும் போட்டி நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu