தொழிலாளர் சட்ட திருத்த நகல் எரிப்பு போராட்டம்

தொழிலாளர் சட்ட திருத்த நகல் எரிப்பு போராட்டம்
X
தேனியில் தொழிலாளர் சட்டத் திருத்த தொகுப்பு நகல் எரிப்புப் போராட்டத்தில் காவல்துறையினர் - போராட்டக்காரர்கள் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு. தடையை மீறி நகலை எரித்த 25க்கும் மேற்பட்டோர் கைது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்டத் திருத்த தொகுப்பிற்கு தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று நாடு முழுவதும் சிஐடியு, ஏஐடியுசி, எல்.பி.எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்திலும் நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.

தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் சிஐடியு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தொழிலாளர் சட்ட திருத்தம், மின்சார சட்டம் -2020ஐ திரும்பப் பெற வேண்டும், பொதுத் துறையை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் தொழிலாளர் சட்ட திருத்த நகலை எரிக்க முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டகாரர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போய் தள்ளுமுள்ளு உண்டானது. இதில் இருவர் கீழே விழுந்தனர். பின் தடையை மீறி சட்ட திருத்த நகலை எரிக்க முயன்ற 25க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனால் தேனி பழைய பேருந்து நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags

Next Story