முல்லை பெரியாறு அணைக்கு மின் விநியோகம் வழங்கும் விழா
இருபது வருடங்களுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணைக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டது.
கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. அணைப்பகுதிக்குத் தேவையான மின்சாரம் கேரளாவின் வல்லக்கடவு பகுதியில் இருந்து விநியோகம் செய்யப்பட்டு வந்தது.கடந்த 2000ம் ஆண்டில் மின்கம்பிகள் உரசியதில் யானை தாக்கி உயிரிழந்ததையடுத்து முல்லைப் பெரியாறு அணைக்கு வழங்கி வந்த மின்சாரத்தை கேரள மின்வாரியம் நிறுத்தியது. இதனால் மதகுப்பகுதி, ஆய்வாளர் மாளிகை, அணைப்பகுதி, குடியிருப்பு பகுதிகளில் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அணைப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்க பெரியாறு புலிகள் சரணாலயம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
பாதுகாக்கப்பட வேண்டிய அணைப்பகுதிக்காக நிலத்துக்கு அடியில் கேபிள்கள் பதித்து அவசியம் மின் இணைப்பு வழங்க வேண்டும் எனக்கோரியது. இதனை ஏற்ற கேரள உயர்நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணைக்கு மின்சாரம் வழங்க உத்தரவிட்டது. அதனடிப்படையில் வல்லக்கடவு பகுதியில் இருந்து 5.5கி.மீ தூரத்திற்கு பூமிக்கு அடியில் மின்சார கம்பிகள் பதிக்கும் பணிகள் கடந்த 2020 நவம்பர் மாதம் துவக்கப்பட்டது. மேலும் இதற்காக கேரள மின்வாரியத்திற்கு ரூ.1.65 கோடியை தமிழக அரசு செலுத்தியது.
இந்நிலையில் பூமிக்கு அடியில் மின்சார கம்பிகள் பதிக்கும் பணிகள் கடந்த ஜனவரியில் முடிவடைந்ததை அடுத்து இன்று அதற்கான இணைப்பு விழா நடைபெற்றது. இடுக்கி மாவட்டம் வண்டிப் பெரியாரில் நடைபெற்ற விழாவில், கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம்.மணி, முல்லைப் பெரியாறு அணைக்கான மின் இணைப்பை துவக்கி வைத்தார். விழாவில், இடுக்கி எம்.பி. டீன் குரியகோஸ், பீர்மேடு எம்எல்ஏ.,பிஜூமோள், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவிபல்தேவ் மற்றும் தமிழக - கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 20 ஆண்டுகளுக்குப்பின் அணைக்கு மின் இணைப்பு வழங்கியதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu