அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் வரும் 6ம் தேதி தீர்ப்பு
அமைச்சர் பொன்முடி.
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர், கடந்த, 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 630 சதுர அடி நிலத்தை, தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, போலி ஆவணங்கள் தயாரித்து மாமியார் சரஸ்வதி பெயரில், பதிவு செய்ததாக, பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, அப்போதைய அடையாறு சார் பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு உள்பட 10 பேர் மீது, 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார் பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு ஆகிய மூன்று பேர் இறந்தனர்.
இதையடுத்து, பொன்முடி உள்ளிட்ட மற்ற ஏழு பேர் மீதான வழக்கில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜரத்தினம் உள்பட 90-க்கும் மேற்பட்ட சாட்சிகள் அரசுத் தரப்பில் விசாரிக்கப்பட்டனர். நுாற்றுக்கும் மேற்பட்ட சான்று ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் ஜூலை 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஜெயவேல் அறிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu