ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 2ம் நாளாக தொடரும் சோதனை

ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 2ம் நாளாக தொடரும் சோதனை
X
ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 2ம் நாளாக வருமானவரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை புறநகர் பகுதியில் திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் 2ம் நாளாக வருமானவரித்துரையினர் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அரக்கோணம் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகன், கல்வி நிறுவனம், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக இவர் மற்றும் குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது.

அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை டத்தினர். வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்ட குற்றச்சாட்டில், ரூ.89.19 கோடி மதிப்பிலான அவரது சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி இருந்தது.

இதனைத்தொடர்ந்து தற்போது ஜெகத்ரட்சகன் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித் துறையின் புலனாய்வு பிரிவுக்கும் புகார்கள் சென்றுள்ளன.

இந்தநிலையில், சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் மற்றும் அடையாறு கஸ்தூரிபா நகர் முதலாவது பிரதான சாலை ஆகிய இடங்களில் அவரது வீடுகள், குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரேலா மருத்துவமனை, தியாகராய நகர் திலக் தெருவில் உள்ள ஆழ்வார் ஆய்வு மையம் அலுவலகம், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அக்கார்டு நட்சத்திர ஓட்டல், வேளச்சேரியில் உள்ள ஆர்க்கிட் அடுக்குமாடி குடியிருப்பு, கிண்டி கலைமகள் நகர் பாளையக்காரன் தெருவில் உள்ள நியூடெல்டா நிறுவன அலுவலகம், அடையாறு எல்.பி. சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, அண்ணா நகரில் உள்ள பரணி பில்டர்ஸ் மற்றும் சிகரம் ஐஏஎஸ் அகாடமி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை 5 மணி முதல் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை அழைத்துச் சென்றனர்.

புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூர் அகரம் கிராமத்தில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி மற்றும் நிர்வாக அலுவலகத்தில், சென்னை மற்றும் புதுச்சேரியில் இருந்து சென்ற 12 வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை 2 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனை இன்றும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. நேற்று முதல் ஜெகத்ரட்சகனின் வீட்டில் அதிகாரிகள் அங்கேயே தங்கியிருந்து விடிய விடிய சோதனை செய்தனர். தற்போது மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி மருத்துவமனை, வாலாஜாபாத் மதுபான ஆலை உள்ளிட்ட 30 இடங்களில் இன்று சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நிறைவடைந்த பின்னரே முழு விவரமும் தெரிவிக்கப்படும் என வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!