விஜயகாந்த் போல் அவரது குரலில் பேசிய சாமியார்: கண்கலங்கிய பிரேமலதா

விஜயகாந்த் போல் அவரது குரலில் பேசிய சாமியார்: கண்கலங்கிய பிரேமலதா
X

விஜயகாந்த் போல் பேசிய சாமியார், பிரேமலதாவிற்கு ஆறுதல் கூறிய காட்சி.

விஜயகாந்த் சமாதிக்கு வந்த சாமியார் அவரை போல் அவரது குரலில் பேசியதால் பிரேமலதா கண்கலங்கினார்.

விஜயகாந்த் சமாதியில் அவரைப்போல் பேசிய சாமியாரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைக்கேட்ட விஜகாந்தின் மனைவி பிரேமலதா கண் கலங்கினார். இதை தே.மு.தி.க.வினர் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

தனது இயல்பான நடிப்பால் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவரும், கொள்கை உறுதி, மக்களுக்கான உழைப்பை கொடுத்தவருமான தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த்தின் மறைவு தமிழக மக்களை உலுக்கி போட்டுவிட்டது.அவரது இறுதி ஊர்வலகத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்களின் அழுகுரலும், கண்ணீர் கதறலும், சென்னையை அன்றைய தினம் அதிர வைத்திருந்தது.

லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில், தே.மு.தி.க. அலுவலக வளாகத்தில் சந்தன பேழையில் வைத்து விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்று முதல் இன்றுவரை அவரது நினைவிடத்துக்கு சினிமா உலக பிரபலங்களும், தொண்டர்களும், பொதுமக்களும் சென்று அஞ்சலி செலுத்தியபடியே உள்ளனர்.

அந்த சமாதியில் நின்று பலரும் கதறி கதறி அழுதுவிட்டு செல்கிறார்கள்.. சிலர் அப்படியே பித்துப் பிடித்தவர் போல அமைதியாக உறைந்து உட்கார்ந்து விடுகிறார்கள். மேலும் சிலர், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்துவிட்டு சென்று வருகிறார்கள். அதேபோல, விஜயகாந்த் மறைவையடுத்து, சில ஆச்சரிய சம்பவங்களும் நடந்தபடியே உள்ளன.. விஜயகாந்த் உடலை நல்லடக்கம் செய்ய கொண்டுசென்றபோதே, அவரது பூத உடலை கருடன் ஒன்று வட்டமடித்து கொண்டேயிருந்தது. இந்த காட்சி அப்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.

அதேபோல, நடிகர் விஜயகாந்த் ஆசையாய் வெள்ளை கிளி ஒன்று வளர்த்து வந்தார்.. இந்த கிளி அவரை, "கேப்டன்.. கேப்டன்.." என்று வாய் நிறைய கூப்பிடுமாம். அதனால், அதற்கு கேப்டன் என்றே பெயர் வைத்து விட்டார்கள்.. 2 நாட்களுக்கு முன்பு, வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் விஜயகாந்த்தின் உருவப்படத்தையே, அந்த வெள்ளை கிளி சுற்றி சுற்றி வந்ததாம். பிறகு, திடீரென படத்தின் முன்பு உட்கார்ந்தது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது.

இந்நிலையில், சாமியார் ஒருவர், விஜயகாந்த்தை போலவே அருள் வந்து பேசியது, பிரேமலதாவை நெகிழ செய்துவிட்டது.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் நினைவிடத்திற்கு அன்னதானம் வழங்குவதற்காக வந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சாமியார் வந்திருந்தார். பிரேமலதாவிடம் சென்ற அந்த சாமியார், விஜயகாந்த் பற்றி பேச ஆரம்பித்தார்.. அவர் பேசிய ஒவ்வொரு வரிகளையும் கேட்டு, நெகிழ்ந்து போனார் பிரேமலதா.

"கேப்டன் எங்கும் போகவில்லை.. உங்கள் மூத்தமகன் உருவில் உங்களுடன் இருக்கிறார்.. காசி விஸ்வநாதர் என் கனவில் தோன்றி, விஜயகாந்த் சமாதிக்கு சென்று சங்கு ஊதும்படி சொன்னார்.அதனால்தான், இங்கு நான் வந்தேன். கேப்டன் எங்கும் போகவில்லை உங்கள் மூத்தமகன் உருவில் உங்களுடன் இருக்கிறார்" என்றார்.

சாமியார் இப்படி பேசிக்கொண்டேயிருந்தபோது, திடீரென அருள் வந்தது போல், விஜயகாந்தை போல் அவரது குரலிலேயே பேசினார்.. "என்னை பத்தி உனக்கு தெரியுமில்ல? இந்த ஏழை எளிய மக்களை விட்டுட்டு நான் எங்கே போகப்போறேன்? பிரேமா உன் இதயத்தில்தான் நான் குடியிருக்கிறேன்" என்று விஜயகாந்த் குரலில் சாமியார் பேச ஆரம்பித்ததும் பிரேமலதா கண்கலங்கி விட்டார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்