பிரதமர் மோடி இறங்குவதற்காக திருச்சி ஸ்ரீரங்கத்தில் தயாராகும் ஹெலிபேட்

பிரதமர் மோடி இறங்குவதற்காக திருச்சி ஸ்ரீரங்கத்தில் தயாராகும் ஹெலிபேட்
சுவாமி தரிசனத்திற்காக வரும் பிரதமர் மோடி இறங்குவதற்காக திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஹெலிபேட் தயாராகி வருகிறது.

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 22 ஆம் தேதி நடைபெற உள்ளது/ கும்பாபிஷேகத்தின் போது பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோவிலின் கர்ப்பகிரகத்தில் குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வைக்கிறார். இதற்காக அவர் 11 நாட்கள் விரதம் இருந்து வருகிறார்.

மேலும் கும்பாபிஷேக விழாவிற்கு முன்னதாக ராமர் கோவில் தொடர்புடைய இடங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று புனித நீரை சேகரித்து செல்லவும் தயாராகி வருகிறார். இதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக தமிழகத்திற்கு நாளை ( 19ம் தேதி )வருகிறார்.

இந்த வருகையின் போது சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி மறு நாள் திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு வருகிறார். ராமர் குலதெய்வமாக வழிபட்ட திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யும் மோடி அரிச்சல் முனையை பார்வையிடுகிறார்.

பிரதமர் மோடியின் 3 நாள் சுற்றுப்பயண விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

நாளை (19ஆம் தேதி) பிற்பகல் 4. 55 மணிக்கு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தை வந்து அடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையாறு பகுதிக்கு மாலை 5 .15 மணிக்கு செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு மோடி 5.30 மணிக்கு வருகிறார்.வழியில் பாரதிய ஜனதா சார்பில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மாலை 6 மணிக்கு விழா கேலோ இந்தியா விளையர்டு போட்டிகள் தொடங்குகிறது. அந்த விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ரவி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மந்திரி அனுராக்சிங் தாகூர், இணை மந்திரி நிசித் பிரமானிக், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.விழா முடிந்ததும் இரவு 7.45 மணிக்கு பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு சென்று இரவு அங்கு தங்குகிறார்.

மறுநாள் சனிக்கிழமை காலை 9 மணிக்கு ராஜ் பவனில் இருந்து புறப்பட்டு 9. 20 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு காலை 10.20 மணிக்கு வந்து அடைகிறார். திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கத்திற்கு மோடி செல்கிறார். இதற்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் பின்பகுதியில் உள்ள யாத்திரி நிவாஸ் அருகே பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் இறங்குவதற்காக டெலிபேட் அமைக்கப்பட்டு வருகிறது.

ஹெலிபேடில் இறங்கி அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு செல்லும் பிரதமர் மோடி சுமார் ஒரு மணி நேரம் கோவிலில் இருக்கிறார். மூலவர் ரங்கநாதர், தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி மற்றும் உடையவர் எனப்படும் ராமானுஜர் சன்னதி ஆகியவற்றிலும் தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு ராமேஸ்வரம் மண்டபம் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்குகிறார்.

அங்கிருந்து கார் மூலமாக புறப்பட்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்று தீர்த்த கிணறுகளில் புனித நீராடுகிறார். அவ்வாறு நீராடும் போது 22 தீர்த்தங்களின் புனித நீரையும் பிரதமர் மோடி தனித்தனியாக சேகரிக்கிறார். பின்னர் சுவாமி, அம்பாள், விநாயகர் நடராஜர் சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்கிறார் மாலை 6 மணி அளவில் ராமர் பாதம் சென்று தரிசிக்கிறார். இதனைத் தொடர்ந்து இரவில் ராமேஸ்வரம் கோவில் எதிரே உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு சென்று தங்குகிறார்.

மறுநாள் 21ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் கார் மூலம் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல் முனை செல்கிறார். அங்கு கடலில் புனித நீராடி சிறப்பு பூஜை செய்து அங்கிருந்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக புனித மண், கடல் நீரை சேகரிக்கிறார். பின்னர் 10.30 மணி அளவில் கோதண்ட ராமர் சுவாமி கோவிலுக்கு சென்று தரிசிப்பதுடன் பூஜைகள் செய்தும் வழிபடுகிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு மண்டபம் ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்து 11.30 மணி அளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை விமான நிலையம் செல்கிறார்.தொடர்ந்து அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை, திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். பிரதமர் பங்கேற்கும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக அந்த பகுதிகளில் ட்ரோன்கள் பரப்பதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தடை விதித்து உள்ளனர்.

மேலும் திருச்சியில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் முன்னேற்பாடுகள் பணிகள் தொடர்பாகவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர், காமினி மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி உட்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story