3வது பிரசவத்துக்கு விடுப்பு கேட்ட அரசுப்பள்ளி ஆசிரியை.. குட்டு வைத்த நீதிமன்றம்

3வது பிரசவத்துக்கு விடுப்பு கேட்ட அரசுப்பள்ளி ஆசிரியை.. குட்டு வைத்த நீதிமன்றம்
X

சென்னை உயர் நீதிமன்றம் (கோப்பு படம்).

மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு கேட்ட அரசுப் பள்ளி ஆசிரியைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருபவர் தனது, 3 ஆவது பிரசவத்துக்காக பேறுகால விடுமுறை கேட்டு விண்ணப்பம் செய்தார். ஆனால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 2 குழந்தைகள் பிரசவத்துக்கு மட்டும் அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்படும். 3 ஆவது பிரசவத்துக்கு வழங்கப்படாது என்று உத்தரவிடப்பட்டது.

அதை எதிர்த்து ஆசிரியை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மனோகரன் ஆஜராகி, ‘‘மனுதாரர் ஆசிரியையாக பணியில் சேருவதற்கு முன்பு திருணமாகி, 2 குழந்தைகள் பிறந்து விட்டனர்.

அவரது கணவர் 2004 ஆம் ஆண்டு இறந்து விட்டார். அதன்பின்னர், ஆசிரியை பணியில் சேர்ந்த மனுதாரர், மறுமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் கர்ப்பம் ஆனார். அவருக்கு இரட்டைக்கு ழந்தைகள் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி பிறந்தனர்.

அவர் பேறுகால விடுப்பு கேட்டு, 2022 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்குரிய அடிப்படை விதியை தவறாக கல்வி அதிகாரி புரிந்துக் கொண்டார். 1961 ஆம் ஆண்டு பேறுகால பலன்கள் சட்டம், அரசியல் அமைப்புச் சாசனத்தின் அடிப்படையில் இயற்றப்பட்டது. பேறுகால சட்டம், நலச்சட்டமாகும். அந்த சட்டத்தில், இதுபோல 3 ஆவது பிரசவத்துக்கு விடுப்பு வழங்க முடியாது என்று கூற முடியாது’’ என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘தமிழ்நாடு பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்துறை கடந்த 2016, 2017 ஆம் ஆண்டுகளில் அரசாணைகள் பிறப்பித்துள்ளன. அதன்மூலம், 2 குழந்தைகள் பிரசவத்துக்கு மட்டுமே பேறுகால விடுமுறை வழங்க முடியும். அரசு ஊழியர்களுக்கு அடிப்படை விதிகள் மட்டுமே பொருந்தும். இந்த விதிகளின்படி, மனுதாரருக்கு 3 ஆவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு வழங்க முடியாது. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்சும் தீர்ப்பு அளித்துள்ளது’’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

அரசு பெண் ஊழியர்களுக்கு 2 குழந்தைகள் பிரசவிக்க மட்டுமே பேறுகால விடுப்பு கண்டிப்பாக வழங்கப்படும் என்று விதிகள் உள்ளன. அதுவும் 365 நாட்களுக்கு மேல் விடுப்பு வழங்க முடியாது. இந்த விவகாரத்தில் அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்த பின்னர், அதை மீறி 3 வது பிரசவத்துக்கு மனுதாரர் விடுப்பு கோர முடியாது.

மேலும், அரசு 3 ஆவதாக குழந்தை பெற்று எடுப்பதை தடுக்கும் விதமாக விதிகளை கொண்டு வந்துள்ள நிலையில், மனுதாரர் தற்போது 4 குழந்தைகளை பெற்று எடுத்துள்ளார். அதனால், மனுதாரருக்கு 3 ஆவது குழந்தை பெற்று எடுக்க விடுப்பு கோர முடியாது. இவரது விண்ணப்பத்தை நிராகரித்தது சரிதான். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி கூறியுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!