பாலியல் வழக்கில் கைதான கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், இதுதொடர்பாக கல்லூரியின் நடன துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மனை ஏப்ரல் 3 ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹரி பத்மன் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையெடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹரி பத்மன் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வளர்ச்சியை பிடிக்காத சக ஆசிரியர்கள், மாணவிகளைத் தூண்டி விட்டு ஹரி பத்மனுக்கு எதிராக பொய் புகார் அளித்து உள்ளதாகவும், 2019 ஆம் ஆண்டு சம்பவம் நடந்ததாக கூறி, நான்கு ஆண்டுகளுக்கு பின் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் ஹரி பத்மன் தரப்பில் வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பில், இந்த வழக்கு தொடர்பாக, 162 மாணவிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்கள், ஹரிபத்மன் மீது குற்றச்சாட்டுக்களை தெரிவித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய வேண்டியது உள்ளதால், ஜாமீன் வழங்க கூடாது எனவும் ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மகளிர் ஆணையம் தரப்பில், 103 மாணவிகளிடம் விசாரித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், விசாரணை குழுவை மாற்றியமைக்க கோரி ஏழு மாணவிகள் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம், ஜூன் 15 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஹரி பத்மனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிபதி இளந்திரையன், ஹரி பத்மனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூன் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu