மரக்கன்றுகளை பிளாஸ்டிக் பைகளில் எடுத்துச் செல்ல தடை.. அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு...

மரக்கன்றுகளை பிளாஸ்டிக் பைகளில் எடுத்துச் செல்ல தடை.. அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு...
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

மரக்கன்றுகளை பிளாஸ்டிக் பைகளில் எடுத்துச் செல்ல தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வன விலங்குகள் பாதுகாப்பு, யானைகள் பாதுகாப்பு மற்றும் வேட்டை தடுப்பு, வனத்துறை அதிகாரிகள் நியமனம் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, வனக் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு புலனாய்வு குழுவில் கேரள அரசின் பிரதிநிதியாக யாரும் நியமிக்கப்படவில்லை என்பதால், மார்ச் 16 ஆம் தேதிக்குள் பிரதிநிதியை நியமித்து, அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், மின்வேலிகளால் விலங்குகள் பலியாவதை தடுக்க மின்வேலிகள் அமைப்பது தொடர்பான விதிகளை வகுக்கும் நடவடிக்கைகள் நடந்து வருவதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விதிகளை இறுதி செய்யும் வரை விலங்குகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் மின்வேலிகளை அமைக்கும்படி விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், வனத்துறை மற்றும் மின் துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு செய்து, அபாயகரமான மின் வேலிகள் அமைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதற்கிடையே, வனத்துறையில் காலியாக உள்ள ஆயிரத்து 163 பணியிடங்களை நிரப்ப எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், தேர்வுப் பணிகளை முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை மார்ச் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில், வனப்பகுதிகளில் தடையை மீறி தனியார் நர்சரிகள் மரக்கன்றுகளை பிளாஸ்டிக் பைகளில் எடுத்துச் செல்வதாக மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அப்போது, அரசுத் தரப்பில் நர்சரி நிறுவனங்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையெடுத்து, தனியார் நர்சரிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை விதித்து அரசாணை பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடரபான மனுவை ஏப்ரல் 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags

Next Story