ரூ.12.02 கோடி மதிப்பிலான தொழில் துறையின் 3 புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர்
தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் ரூ.12.02 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள துறையின் மூன்று புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (16.3.2022) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் கடன் உத்தரவாத நிதியம் ஆகியவற்றிற்கு இடையே கணினிமயமாக்கப்பட்ட இணையதளம் தயாரிக்கும் பொருட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் கயிறு குழுமத்தின் தென்னை நார் உற்பத்திக் கூடம், காக்களூர் - மத்திய மின்பொருள் சோதனைக்கூடத்தில் எல்.இ.டி விளக்குகள் மற்றும் பொருத்திகளுக்கான பிரத்யேக சோதனைக்கூடம், விருத்தாச்சலம் - பீங்கான் தொழில் நுட்பக்கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்காக கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி ஆகியவற்றை திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்கள் உற்பத்தி அலகுகளுக்காக தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் (TNCGS) பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு 40 இலட்சம் ரூபாய்க்கு குறைவான வங்கி கடன்களுக்கு 90 சதவிகித உத்தரவாதமும், 40 இலட்சம் ரூபாய்க்கு மேல் 2 கோடி ரூபாய் வரை உள்ள கடன்களுக்கு 80 சதவிகித உத்தரவாதமும் ஒன்றிய அரசின் குறு மற்றும் சிறு தொழில்களுக்கான கடன் உத்தரவாத நிதியத்துடன் (CGTMSE) இணைந்து தமிழ்நாடு அரசு ஆறு மாதங்களுக்குள் வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த கடன் உத்தரவாத திட்டத்துடன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு விரிவான மதிப்பீட்டு திட்டமும் ஒருங்கிணைந்து வழங்கப்படும். இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இன்னும் 6 மாதத்தில் தொடங்கப்படும் வகையில் முழுவதுமாக கணினிமயமாக்கப்பட்ட இணையதளம் (Electronic platform) தயாரிக்கும் பொருட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் கடன் உத்தரவாத நிதியம் (CSTMSE) ஆகியவற்றிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
பூதலூரில் தென்னை நார் உற்பத்திக் கூடத்தை திறந்து வைத்தார்
தமிழ்நாடு அரசின் கயிறு குழுமங்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு மற்றும் சிறப்பு நோக்கக்குழு (SPV) ஆகியவற்றின் நிதி பங்களிப்புடன், மதிப்பு கூட்டப்பட்ட தென்னை நார் பொருட்களை உற்பத்தி செய்திடும் நோக்கில், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், செங்கிப்பட்டி கிராமத்தில் பூதலூர் கயிறு உற்பத்தியாளர் நிறுவனத்தின் கயிறு குழுமத்தை தொடங்கி வைத்து, அக்குழுமத்தின் சார்பில் 3 கோடியே 42 இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தென்னை நார் உற்பத்திக் கூடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்து, தென்னை நார் உற்பத்தியை தொடங்கி வைத்தார்.
இக்கயிறு குழுமத்தின் மூலமாக நேரடியாக 100 நபர்களும், மறைமுகமாக 200 நபர்களும் வேலைவாய்ப்பு பெறுவதுடன், குழுமத்தின் 15 கயிறு நிறுவனங்களும் பயன்பெறும். எல். இ. டி விளக்குகள் மற்றும் பொருத்திகளுக்கான சோதனைக்கூடத்தை திறந்து வைத்தார்
திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் அமைந்துள்ள மத்திய மின்பொருள் சோதனைக்கூடத்தில், மாநில புதுமைத் திட்டத்தின் கீழ் 6 கோடியே 95 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள எல்.இ.டி விளக்குகள் மற்றும் பொருத்திகளுக்கான பிரத்யேக சோதனைக்கூடத்தை முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இச்சோதனைக் கூடத்திற்கான உபகரணங்கள் ஜெர்மனி நாட்டிலிருந்து கொள்முதல் செய்து நிறுவப்பட்டுள்ளது.
பீங்கான் (Ceramic) தொழில் நுட்பக்கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கான தங்கும் விடுதியை திறந்து வைத்தார்.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சத்தில் இயங்கி வரும் பீங்கான் தொழில் நுட்பக்கல்வி நிறுவனத்தில் பயிலும் வெளி மாவட்ட மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு , 1 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் 50 மாணவர்கள் தங்குவதற்கு வசதியாக 6000 சதுர அடி பரப்பளவில் பத்து தங்கும் அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொளிக்காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி. அருண்ராய் இ.ஆ.ப., தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், கடன் உத்தரவாத நிதியத்தின் (CGTMSE) தலைமைச் செயல் அலுவலர் சந்தீப் வர்மா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu