துணைவேந்தர் நியமனம் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் முடித்து வைப்பு

துணைவேந்தர் நியமனம் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் முடித்து வைப்பு
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன நடைமுறை தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் முடித்து வைக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் வேந்தராக உள்ளார். இந்த பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் நடைமுறையில் அரசு தேர்வு செய்யும் மூன்று நபர்களில் ஒருவரை ஆளுநர் துணைவேந்தராக நியமிப்பது வழக்கம்.

இந்த நிலையில், சில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் பதவி காலியாக இருந்த போதிலும் அவற்றை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்துக்கு கால நிர்ணயம் செய்து விதிமுறைகள் வகுக்க உத்தரவிடக் கோரி மாற்றம் இந்தியா அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், பல்கலைக்கழக மாணவர்களின் நலனை பாதுகாக்கவும், பல்கலைக்கழக செயல்பாடுகளில் இடையூறு ஏற்படாமலும் தடுக்க, துணைவேந்தர்கள் நியமன நடைமுறைகளை உடனுக்குடன் முடிக்கும் வகையில் கால நிர்ணயம் செய்து விதிமுறைகளை வகுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், துணைவேந்தர்கள் தேர்வு நடைமுறைகளை எப்போது துவங்குவது, எப்போது முடிப்பது என கால நிர்ணயம் செய்து தமிழ்நாடு பல்கலைக்கழக திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஆண்டும், தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டம், சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு பிளீடர் முத்துகுமார் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers