Big Relief for Teachers: ஆசிரியர் தகுதித் தேர்வு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Big Relief for Teachers: ஆசிரியர் தகுதித் தேர்வு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

2011ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

மத்திய அரசு, கல்வி உரிமைச் சட்டத்தை கடந்த 2009ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என 2011 ஆம் ஆண்டில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், 2011 ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை எனக் கூறி, அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என உத்தரவிட்டது. ஊதிய உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என தீர்ப்பளித்து உள்ளனர்.

நேரடியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற தமிழக அரசின் விதியை ரத்து செய்த நீதிபதிகள், பதவி உயர்வுக்கும் தகுதித்தேர்வு கட்டாயம் என தெளிவுபடுத்தி உள்ளனர்.

Tags

Next Story