சிவகிரியில் தொடர் வனவிலங்கு வேட்டை: இருவர் குண்டர் சட்டத்தில் கைது
சிவகிரியில் வனவிலங்குகளை வேட்டையாடிய இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ராசிங்கப்பேரி கண்மாய் அருகில் பழத்தினுள் நாட்டு வெடிகுண்டு வைத்து மூன்று புள்ளி மான்கள், ஒரு காட்டுப்பன்றியை வேட்டையாடியதாக சிவகிரி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற வனச்சரகர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் மூன்று புள்ளி மான்கள் ஒரு காட்டு பன்றியை வேட்டையாடி காரில் கடத்தி வரும்போது மாறுவேடத்தில் இருந்த வனத்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 2 பேரையும் விசாரணை மேற்கொண்டதில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த மதன்ராஜ், மகேஷ் ஆகிய 2பேரும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மான் மற்றும் காட்டுப் பன்றியை நாட்டு வெடிகுண்டு வைத்து வேட்டையாடும் தொடர் குற்றவாளி என்பதால் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர், வன உயிரின காப்பாளர், ஆகியோரின் உத்தரவின்பேரில் சிவகிரி வனச்சரகர் சுரேஷ் தலைமையில் இரண்டு பேருக்கு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இது போன்ற வன குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகிரி வனச்சரகர் சுரேஷ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu