தென்காசி அருகே அடர் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய இரண்டு நபர்கள் கைது
அடர் வனபகுதியில் மானை வேட்டையாடியதாக கைது செய்யப்பட்ட இருவருடன் வனத்துறையினர்.
அடர்வனப் பகுதிக்குள் புகுந்து மானை வேட்டையாடிய இரண்டு நபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டமாகும். பல்லுயிர் காடுகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் யானை, மான், மிளா, சிறுத்தை,கரடி என அதிகமான வனவிலங்குகள் உள்ளன. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதிகளில் அவ்வப்போது அனுமதியின்றி புகுந்து வன உயிரினங்களை வேட்டையாடுவது தற்போது வழக்கமாகி வருகிறது.
இந்நிலையில் சிவகிரி வனப்பகுதிக்கு உட்பட்ட தேவியார் பீட் பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, வனப்பகுதிகளுக்குள் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அவர்களை பிடித்து துருவித், துருவி விசாரணை நடத்திய போது அவர்கள் மான் வேட்டையில் ஈடுபடுபவர்கள் என்பதும், மான் வேட்டைக்காக வனப்பகுதிக்குள் நுழைந்து பெரிய அளவிலான ஆண் மா ஒன்றை வேட்டையாடி வனத்துறையினரை பார்த்ததும் அதை புதருக்குள் மறைத்து வைத்ததும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, மான் வேட்டையில் ஈடுபட்ட தேவிபட்டிணம் பகுதியை சேர்ந்த முத்து மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரையும் கைது செய்த வனத்துறையினர், வேட்டையாடப்பட்ட மானையும் மீட்டு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், வன உயிரினமான மானை வேட்டையாடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 2 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதித்ததோடு மட்டுமல்லாமல் இது போன்ற நடவடிக்கைகளை இனிமேல் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து அனுப்பினர்.
இது போன்ற வன உயிரின வேட்டையில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu